உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

31



பவணந்தி முனிவரும் தம் நன்னூலில்,

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே’

என்று கூறியுள்ளமையை நோக்குக.

ஒரு காலத்தில் நல்லொழுக்கமாகக் கருதப் பெற்றது மற்றொரு காலத்தில் இழுக்கமாகவும், ஒரு காலத்தில் இழுக்கமாகக் கருதப்பெற்றது மற்றொரு காலத்தில் ஒழுக்க மாகவும், ஒரிடத்தில் ஒழுக்கமாகக் கருதப் பெற்றது மற்றோ ரிடத்தில் இழுக்கமாகவும், ஓரிடத்தில் இழுக்கமாகக் கருதப் பெற்றது மற்றோரிடத்தில் ஒழுக்கமாகவும், ஒரு காலத்தி லேயே ஓரிடத்திலேயே-ஒரு கூட்டத்தாரால் ஒழுக்கமாகக் கருதப்பெற்றது மற்றொரு கூட்டத்தாரால் இழுக்கமாகவும், ஒரு கூட்டத்தாரால் இழுக்கமாகக் கருதப்பெற்றது மற்றொரு கூட்டத்தாரால் ஒழுக்கமாகவும் கருதப்பெறக் கூடும். இவற்றிற்கெல்லாம் எடுத்துக்காட்டு (உதாரணம்) தர வேண்டுமாயின் விரியும். எனவே, காலத்திற்கேற்ப, இடத்திற் கேற்ப, சூழ்நிலைக்கேற்ப மக்கள் தத்தம் ஒழுக்கங்களை - நடைமுறைச் செயல்களை வகுத்துக்கொண்டு வாழ்வதே அறிவுடைமை.

கற்றவர் சிலர்-சிலரென்ன, பலர்-தங்களை ஏதோ தனிப் பிரிவினர் - உயர் வகுப்பினர் என்று எண்ணிக்கொண்டு, சமூக மக்களோடு நன்கு கலந்து பழகாமல் - அவர்கட்கு ஆவன புரியாமல் ஒதுங்கி வாழ்கின்றனர். வேறு பல கலை களைக் கற்றிருப்பினும், உலக மக்களோடு ஒட்டி வாழ்தலைக் கல்லாத இவர்களை உண்மையில் கல்வி உடையவர்களாக எப்படிக் கொள்ள முடியும்? கற்றும் இவர்கள் அறிவிலிகளே யாவார்கள். எனவே, உலகத்தோ டொட்டி ஒழுகலும் ஒரு சிறந்த பேரொழுக்கமாகும்.