பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 போல நடந்து கொண்டதைக் கண்டு அவள் கவலையடைந்தாள். கதிரேசனிடம் வேறு அதைப் பற்றிப் பேசினாள். பட்டணத்துக்குப் புதுசு, அதனாலே திகைச்சாப்போலே இருக்கான். நீ வீணாகக் கவலைப் படாதே, எல்லாம் சரியாகி விடும்' என்று அவளைச் சமாதானம் செய்தான் கதிரேசன். ஆனால் மேலும் இரண்டு வாரமாகியும் திருநாவின் மன நிலை சரியாகவில்லை. வரவர அவன் கதிரேசனுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடக்கூட விரும்பாதவன் போல, அவனுக்கு முன்போ அல்லது அவன் சாப்பிட்ட பின்போ வருவதைக் கண்டாள் திலகம். கதிரேசனும் அதைக் கவனித்துத் திலகத்தினிடம் அதைப் பற்றிக் கசந்து கொண்டான். திலகம் பயந்து போய் விட்டாள்; மனம் நொந்து அப்படியே உட்கார்ந்துவிட்டாள். தன் தந்தை தம் வரையில் அப்படி இருந்தது போதாதென்று மகனிடத்திலும் இப்படிப் பிறருடன் ஒட்ட முடியாத மனோபாவத்தை வளர்த்து விட்டுப் போய்விட்டாரே என்ற துக்கம் அவள் நெஞ்சை யடைத்தது. அனாதைகளாகிச் செய்வகை யறியாது நின்ற தருணத்தில், கதிரேசன் தன்னையும் தம்பியையும் காப்பாற்ற முன் வந்த தீரத்தை, அதன் பெருமையை உணர முடியாதபடித் திருநாவின் மனம் முரண்டு கொண்டிருக்கிறதே என்று வருந்தினாள். மணமாகி வந்ததிலிருந்து கதிரேசன் அவர்கள் இருவர் மேலும் அன்பை மழையாகப் பொழிந்து கொண்டிருந்தான். அந்த அன்பு அவ்வளவும் திருநாவு விஷயத்தில் வீணாகி விட்டதே என்ற ஏக்கம் எழுந்தது அவள் உள்ளத்தில். தன் கணவர் மனத்தில் அவன் அவன் கசப்பை வளர்த்து, தன் மண வாழ்க்கையையே பாழாக்கிவிடுவானோ என்ற பயம் அவளைப் பிடித்துக் கொண்டது. அன்று காலையிலிருந்தே வீட்டில் ஏதோ உப்புசம் எழுந்து அழுத்துவது போலப் பட்டது அவளுக்கு. காலையில் காப்பி சாப்பிடு முன் கதிரேசன் திருநாவிடம் ஏதோ கேட்டான். அவன் சரியாகக்கூடப் பதில் சொல்லாமல் வெளியே போய் விட்டதைக் கண்டு திலகத்திடம், 'என்னைக் கண்டாலே பிடிக்கல்லே உன் தம்பிக்கு' என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டுக் காபியும் குடிக்காமல் சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பி விட்டான்.