பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திறப்புரை

103



பேசுகின்றவர்களில் பெரும்பாலோருடைய வாழ்க்கை பழுதுற்றதாகவே உள்ளது. வள்ளுவர், மனிதன் மனிதனாக வாழ வழி வகுத்த வள்ளல். எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற நல்லெண்ணமே அவர் குறள் முழுதும் தலை தூக்கி நிற்கும். எந்த அறத்தை எடுத்து விளக்கினும், அவ்வறத்தின் உட்பொருள், 'நாடு வாழ நாம் வாழவேண்டும்' என்ற செம்மை நெறியிலே தான் சென்று முடியும். 'உலகம் வாழவேண்டும்; அவ்வுலகில் நாமும் வாழவேண்டும்,' என்ற நல்ல கொள்கை உடையவர் எத்தனை பேர் உள்ளனர்? அப்பண்பாளர் நாடுதோறும் ஒரு சிலர் இருந்தாலுங்கூட உலகத்தை அச்சுறுத்தும் அணுக்குண்டுப்போரும் பிற கொடுமைகளும் இடம் பெற வழியில்லையே! இன்றைய உலகம், யார் அறத்தாறு வாழ்கின்றவர் என அறிந்து அவருக்கு மதிப்பளித்துப் பெருமைப்படுத்துவதை விடுத்து, யார் அதிகமாக உயிர்களைக் கொன்று குவிக்க முடியும் என்று தேடித் திரிந்து, அத்தகைய ஆயுதங்களை வைத்திருப்பவர்களையும், அவர்தம் நாட்டையுமே போற்றுகின்றது. ஒருபுறம் உலக சமாதானம் என முழங்கிக்கொண்டே, மற்றொரு புறத்தே ஆயுதச் சத்தியைப் பெருக்கிக் கொள்ளும் நாடுகளே இன்றைய நாகரிகத்தின் தலைசிறந்த நாடுகளென மதிக்கப்படுகின்றன. 'பெயக் கண்டும் நஞ்சுண்டு அமையும்' அன்றைய நாகரிகம் இன்று காண முடியாத ஒன்று. ஒரு குற்றமும் செய்யாத ஏழை எளியவர்களையும், குழந்தைகளையும், நோயாளிகளையும் பிறரையும் ஒரு சேரக் கொன்று குவிப்பதே இன்றைய அணுக்குண்டு நாகரிகம். உள்ளப் பண்பாடாகிய நாகரிகம், உதட்டளவு நாகரிகம் ஆகிவிட்டது. மனத்தால் அறிந்து மகிழ வேண்டிய நாகரிகம், வெளி வேடங்களாகிய ஆடை அணிகளாலும் மாடமாளிகைகளாலும் மறைத்து நசுக்கப்பட்டது. இவற்றின் விளைவுதான் நாட்-