பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

மனிதன் எங்கே செல்கிறான்?


அன்று முதல் இன்று வரை அவ்வருள் உள்ளங்கள் காட்டியதெல்லாம் ஒரே வழிதான். தன்னுயிரைப் போல மன்னுயிரைக் காத்தல் அது. இக்கொள்கையைப் பல சமயத்தவரும் கூறியுள்ளார்கள் ; பல நாட்டவரும் எழுதியுள்ளார்கள். எனினும், தமிழர் தம் எழுத்தில் ஒரு தனிச் சிறப்பினைக் காண இயலும். பிற நாட்டவரெல்லாம் மனிதனோடு மனிதன் ஒத்து வாழ்வதை உணர்த்தினார்கள். ஆனால், தமிழர்களோ, அந்த எல்லையையும் கடந்து, விலங்கு, பறவை, முதலியன மட்டுமன்றி, மரத்தையும் கொடியையுங் கூடத் தம் இனமாகக் கொண்டு அனைத்திடத்தும் சமரசம் கண்டார்கள். தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று நம் தலைமுறையில் கண்டு பிடித்தார்களென நாம் பெருமை கொள்ளுகின்றோம். ஆனால், தமிழன் அன்றே அச்செடி கொடிகளுக்கும் உயிருண்டு என்பதை உணர்ந்ததோடன்றி, அவை வருந்தின் அவற்றின் வாட்டம் தீர்க்கும் வகையில் உதவியும் புரிந்தான் என்பதை ஆராயும்போது அவன் சமரச உணர்ச்சி எந்த எல்லையில் பரந்து செல்லுகின்றது என்பது தெற்றென விளங்காதோ!

பாரி கொடைமடம்பட்டான் என்பது பாரறிந்த வரலாறு. பாரி தமிழ் நாட்டுச் சிற்றரசருள் ஒருவன். அவன் நாடு வாழத்தான் வாழ்ந்தான். பிற உயிர்கள் வாழத் தன்னுயிர் புரந்தான். ஏன் ? அதற்கும் ஒரு படி தாண்டித் தான் வாடினும் பிற உயிர்கள் வாழ வேண்டும் என்ற அருள் உணர்வில் அவன் ஆணை சென்றது. அதை. விளக்கும் சங்கப் பாடல்கள் தாம் எத்தனை!

“சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர்
நல்கிய பிறங்குவெள் ளருவி வீமும் சாரல்
பறம்பிற் கோமான் பாரி” (89-91)

என்று சிறுபாணாற்றுப்படையில் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். எழுதி வைத்த அடிகளை அறியாதார்