பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

மனிதன் எங்கே செல்கிறான்?


தாவர இனத்தைத் தாண்டி விலங்கினத்துக்கு, வருவோம். சிலப்பதிகாரம் தமிழர் நாகரிகத்தை எடுத்துக் காட்டும் எழிலோவியம். அதில் முடிகெழு வேந்தர் மூவரும் பேசப்படுகின்றனர். பாண்டி நாட்டிலே தன் பதியைப் பறிகொடுத்து அலமரும் கண்ணகி, அரசன் முன் முறையிடுகின்றாள். ஆராயாது கொலை செய்த அக் கொடுங்கோலனைக் காணும்போது தன் நாட்டுச் சோழர் மரபும் அவள் கண் முன் நிற்கின்றது. அதற்கேற்பப் பாண்டியனும் ‘நீ யார்?’ என வினவுகின்றான். வினாவுக்கு விடை கூறு முகத்தான் தன் சோழ நாட்டின் சிறப்பைக் கூறுகின்றாள் கண்ணகி :

‘எள்ளரு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
நாவிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத்
தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும் பெயர்ப் புகார் என் பதியே.’

என்று இரு பெரு வேந்தர்களைப் பாண்டியன் முன் காட்டி, வழி வழிச் சிறந்த தமிழ் மரபுக்குக் கொடுமை இழைத்த அவன் கொலைத் தன்மையை விளக்குகின்றாள். அவள் கூறிய அரசர் யாவர்? ஒருவன், புறாவின் அல்லலுக்கு ஆற்றாது தானே அதற்குப் பதிலாகத் துலாத் தட்டேறி அதைக் காத்த மன்னன் சிபி. மற்றொருவன், மடிந்த கன்றை நினைத்துக் கதறும் தாய்ப் பசுவின் துயரம் அறிந்து. அதற்குக் கழுவாயாக அக்கன்றினைக் கொன்ற தன் மகன்மேல் தேரேற்றி அறம் புரிந்த மனு வேந்தன். அவர்தம் கதைகள் எவ்வாறு அமையினும், அவர்கள் கொண்ட சமரச உணர்வே நாம் கைக்கொள்ள வேண்டுவது. ஆம்! பறவையையும் பசுவையும் உயிரெனப் போற்றிப் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,’ என்ற