பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழன் ஒரு சமரச ஞானி

47


‘பசியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி’,

காவிரிப்பூம்பட்டினத்திலே வள்ளுவ முதுமகன் வரப் போகும் விழாவினை உணர்த்தினான் என்பர் சாத்தனார். விழா என்றால், எவரோ ஒரு சிலருக்குத்தான் என்ற உணர்ச்சி மறைய வேண்டும். நாட்டிலே வாழ்கின்ற அத்துணைபேரும் பசியற்றவராகி, பிணியிலராகி, தம்முள் மாறுபாடில்லாத் தன்மையராகல் வேண்டும். ‘பசியும் பிணியும் பகையும்’ நீங்க வேண்டும். வசியும் வளனும் சுரக்கவேண்டும். மழை பெய்து அம்மழையால் நாட்டின் வளம் பெருக வேண்டும். இவ்வாறு அமைந்த நாட்டிலே தான் விழாச் சிறப்படையும்.

தமிழர் திருநாள் இவ்வுண்மையை நன்கு விளக்குகின்றது. அத்திருநாளாகிய இப்பொங்கல் நாளில் அப்படிப்பினை உணர்ந்து நாமும் நாடும் நானிலமும் வாழத் தமிழர் அனைவரும் உறுதி கொண்டு உழைப்போமாக!