பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படிப்பது எதற்கு?

49


மக்களும் விரும்பினார்கள் ; திரள் திரளாக எங்கணும் கூடினார்கள். கூட்டங்கள் சில நடந்தன. படித்தவரும் படிக்கின்றவரும் தனியாகக் கூட வேண்டுமென்று முயன்று தனிக்கூட்டம் ஏற்பாடு செய்தனர். ஆனால், அந்தப் படிப்பாளிகளின் கூட்டந்தான் வெளி நாட்டுத் தலைவர் தம் உள்ளங்களில் எத்தனை தாழ்ந்த வகையில் நினைவு உண்டாகும்படி நடந்துகொண்டது என்பதை நினைக்கும்போது நம் நாட்டுக் கல்வி நிலை இப்படியுமா இழிநிலை எய்தவேண்டும் என்று எண்ணிற்று என் உள்ளம்.

கூட்டத்திற்கு இடையிலே நானும் ஒருவன், பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் அவற்றின் ஆசிரியர்களுக்கும் என்றே ஏற்பாடு செய்யப்பெற்ற கூட்டம் அது. அதற்காகத் தன்னந்தனியாக நுழைவுச் சீட்டுக்களும் வேறு வழங்கினார்கள். வழிகளிலெல்லாம் காவலர் நின்று, சீட்டுக் காட்டியவர்களைத்தான் உள்ளே விட்டார்கள். கூட்டம் நிறைந்திருந்தது. பள்ளிகளின் மாணவர்கள் வந்தால் அவற்றின் ஆசிரியர்களும் தாமே நடத்தி வழிகாட்டி வந்திருப்பார்கள். ஆரம்பப் பாடசாலைச் சிறுவர் சிறுமியரும் குழுமியிருந்தனர். நடுவில் பெண்களையெல்லாம் அமர்த்தினர். சுற்றி நெடுகிலும் ஆடவர் கூட்டம். படிக்கும் மாணவரும் பயிற்றும் ஆசிரியரும் என்று கூறிக்கொள்ளும் அந்தக் கூட்டம், அன்று நடந்துகொண்ட விதத்தைக் கண்ட ரஷ்யத் தலைவர்கள், ‘இதுதான் சென்னையில் கல்வித் தரம்போலும்!’ என்று கருத்தில் நினைத்து உளத்தால் சிரித்திருப்பார்கள் என்பதைக் கூறவும் வேண்டுமா!

கற்றவர் ஒழுங்காக நடக்கக் கடமைப்பட்டவர். கற்பிக்கும் ஆசிரியர்கள் நடந்து காட்ட வேண்டியவர்கள். ஆனால், அன்றைய நிகழ்ச்சி, ஒன்றும் கல்லாத பாமரர்-