பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெய்யறிவு

53


செல்வம் முதலியவற்றின் செருக்கும் பெற்ற தனி மனிதரும் சர்வாதிகார அரசாங்கங்களும் ஆற்றும் கொடுமையாலன்றோ உலகம் ஒரு தலைமுறையில் இரு பெரும் போரைக் கண்டு, மூன்றாவது போரையும் காணுவோமோ என்று அஞ்சத்தக்க நிலையில் செல்லுகின்றது? இக் கொடுமை நீங்க மெய்யறிவைக் காண்பது தேவையன்றோ ? ஆம்! காணல் வேண்டும். யாது மெய்யறிவு?

அறிவினைப் பல வகைகளில் ஆய்ந்து காணும் அறிஞர் திருவள்ளுவர், அறிவின் உச்சியில் ஓர் உயர்ந்த மெய்யறிவை வைத்துப் போற்றுகின்றார். அது தான் முன் கூறியபடி மனிதனை மனிதனாக வாழ வைப்பது. மனிதன் மனிதனாக வாழ வழி என்ன? இப்போது வாழ்கின்றவர்கள் மனிதராக அல்லாமலா வாழ்கின்றார்கள்? பலகோடி மக்கள் வாழும் இந்த உலகில், மனிதன் செயலளவில் அன்றிப் பெயரளவிலேதானா வாழ்கின்றான்? இக்கேள்விகள் எழுவது இயல்பு. உலக நிலையை நோக்கின், சுருக்கமாக ‘ஆம்’ என்று விடையிறுக்கலாம். அதை உலகப் போக்கு வலியுறுத்துகின்றதே!

மனிதனையும் விலங்கினையும் அறிவால் வேறுபடுத்த நினைத்த தொல்காப்பியர், நன்கு அவ்வேறுபாட்டைப் புலப்படுத்துகின்றார். ‘நல்லதன நலனும் தீயதன் தீமையும்’ ஆராய்ந்தறிந்து நல்லாற்றில் ஒழுகி, வையகம் வாழத்தான் வாழும் பகுத்தறிவாகிய ஆறாவது அறிவைப் பெற்றவனே மனிதன் என்பது தொல்காப்பியர் முடிவு. மனித உடம்போடு கூடினும் அந்த ஆராயும் பகுத்தறிவும் அதன் வழி உலக உயிர்களை ஒத்து நோக்கும் பண்பாடும் இல்லையேல், அவன் மானிட உடலோடு வாழினும் மிருகமாகவே மதிக்கப்படுவான் என்பதைத் தொல்காப்பியர் திட்டமாகத் தெரிவிக்கின்றார். அவர்,