பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மனிதன் எங்கே செல்கிறான்?


என்று எக்களிப்புடன் பாடினாரே அந்தப் பாரதியார், இந்தச் செய்தியைப் படித்தால் என்னாவார் என்று கேட்டது என் மனம். அடிமை நாட்டிலாவது இந்த அவதியை ஒருவாறு பொறுக்கலாம். உரிமை நாட்டிலேயே—நம்மை நாம் ஆளும் நாட்டிலேயே—இந்நிகழ்ச்சியா என்று எண்ண உளம் தடுமாறிற்று. மனிதன் மனிதனை அடிமை கொண்டு வாழ்ந்த அமெரிக்கா போன்ற நாடுகளிலே ‘நீகிரோ’ அடிமை இல்லையென்று அன்றாடம் அவர்தம் பத்திரிகைகள் நமக்குப் பறை சாற்றுகின்றன. வாழ்வைப் பொருளுக்குப் பணயம் வைக்கும் வழியில் மனிதன் வாழ்வதிலும், அவன் மாய்தல் எவ்வளவோ மேல்தானே! உண்மையில் ஒரு சிலர் உயர்ந்த வாழ்வு வாழ, பெரும்பாலான மக்கள் தத்தம் வாழ்நாட்களை யெல்லாம் மற்றவர்களுக்கு ஒப்படைத்து அவர்கள் தரும் ஊதியத்தைக் கொண்டு வயிறு வளர்க்கும் காலம் இது என்பதை அறியாதார் யார்? மனித இனம் ஒருவரை ஒருவர் பற்றி வாழக் கடமைப்பட்டதுதான். உலகம் அனைத்தையுமே ஒன்றெனத் தழுவி, எல்லோரையும் நம்பி, ஒருவர் மற்றவருக்காக வாழ்கின்றதை எண்ணி, ஒன்றிய உணர்வில் உற்று வாழ்தல் மனித வாழ்வின் இலட்சியம். ஆனால், ஒருவன் மற்றவனது அடகுப் பொருளாகி, அடிமை என்னும் பெயரில் அல்லும் பகலும் உழைத்து நிற்க வேண்டும் என்ற நியதியில் நாட்டு நிலை செல்லின், அது அறிந்து வருந்தாதிருக்க முடியுமா?

நாகபுரி காட்டுவாசி மகளை அடகு வைக்கும் அளவுக்கு என்ன வந்துவிட்டது? நாமறியோம். எனினும் அது நாட்டு நிலையை ஒருவாறு காட்டுகிறது. நாட்டில் மக்களை அடகு வைக்கும் முறைதான் பல வகையில் வழக்கத்தில் உள்ளது. வரதட்சிணை என்பது அம்முறைகளின் நெறியிலே ஒரு தனிப்பட்டது. பொருளை அடகாக