பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

6. காயிலே இனித்ததும், கனியிலே புளித்ததும்!

பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்ந்தவர்கள் இல்லை. என் தாயும் தந்தையும். அவர்கள் பெற்ற தெல்லாம் இரண்டே பேர்தான் ஆன குடிக்கு ஆண் ஒன்று, பெண் ஒன்று என்பதைப் போல!

ஆனால் எங்கள் குடி ஆன குடியாயிருக்கவில்லை; நான் பத்து வயதுப் பாலகியாயிருந்தபோதே அது ஆகாத குடியாகிவிட்டது. காரணம், மூன்றே நாள் காய்ச்சலில் என் தாயார் கண்ணை மூடிவிட்டதுதான்!

அவர்களுக்குப் பிறகு என்னையும் என்னுடைய அண்ணாவையும் வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வந்தாள் என் பாட்டி - பாட்டி யென்றால் அப்பாவைப் பெற்ற பாட்டியில்லை; அம்மாவைப் பெற்ற பாட்டி,

பெங்களுரிலிருந்து என்னுடைய மாமாவின் வீட்டிலே எவ்வளவோ பெருமையுடன் வாழ்ந்து வந்த அவள், எங்களுக்காக இங்கே வந்து எத்தனையோ சிறுமைகளுக் குள்ளானாள். அத்தனை சிறுமைகளையும் சகித்துக்கொள்ள அவளுக்கு இருந்த ஒரே ஆதாரம் என்ன தெரியுமா? - அவள் எங்கள் மேல் கொண்டிருந்த அன்பு ஒன்றுதான்!

அந்த அன்பே உருவான பாட்டியுடன் எங்கள் தந்தையார் எங்களை விட்டிருந்தால் எவ்வளவோ நன்றா யிருந்திருக்கும். அதுதான்இல்லை; தனக்கு ‘இளையாள்” என்ற பெயரிலும், எங்களுக்குச் சிற்றன்னை’ என்ற பெயரிலும் எங்கிருந்தோ ஒரு தலைவலியைக் கொண்டு வந்து விட்டார். அந்தத் தலைவலியை என் அப்பாவால் புரிந்து கொள்ள முடிந்ததோ என்னவோ, எங்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.