உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1




நெடுஞ்சேரலாதன்

சங்ககாலத்தில் சேரலாதன் என்னும் பெயர்கொண்ட அரசர் நால்வர் இருந்தனர். நெடுஞ்சேரலாதன் இரண்டு பேர். இவர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் என்போர் ஆவர். பெருஞ்சேரலாதன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியோர் மற்ற இருவர். இவர்களுள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசர்கள் எனும் இப்பகுதியின் கீழும், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசப் புலவர்கள் எனும் தலைப்பின் கீழும் காணலாம்.

நெடுஞ்சேரலாதன் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியோடு போரிட்டு மாண்டான். பெருஞ்சேரலாதன் கரிகாற் பெருவளத்தானோடு போரிட்டு முதுகில் காயப்பட்டதற்காகப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர்நீத்தான். சேரவேந்தர்களைச் சிறப்பித்துப் பாடும் பதிற்றுப்பத்து என்னும் நூலில் நெடுஞ்சேரலாதன் இரண்டாம் பத்தில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளான்.

போர்த்திறம்

கடம்பறுத்தல்: அரபிக் கடலில் பல சிறு தீவுகள் உள்ளன[1]. 'இரு முந்நீர்த் துருத்தி'[2] என இது பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ளது. அங்குக் கடம்ப (கடப்ப) மரத்தைக் காவல் மரமாக உடைய அரசன் ஒருவன் இருந்தான். அவனைக் கடம்பன் என்றே குறிப்பிடலாம்[3]. நெடுஞ்சேரலாதன் தன்னிடமிருந்த பெரும்படையைக் கடற்போரில் ஈடுபடுத்தினான்[4]; கடம்பனைத் தாக்கினான். நெடுஞ்சேரலாதன் கடம்பனின் படையைக் கொன்று குவித்தான். குருதி ஆறு ஓடிக் கடற்கழிகளைச் செந்நிறமாக்கியது. காவல் மரம் கடம்பு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டது. அதன் அடித் துணடால் அக்கால வழக்கப்படி நெடுஞ்சேரலாதன் தனக்குப் போர் முரசு செய்து கொண்டான்.

கடம்பை வெட்டி வீழ்த்தும்படி நெடுஞ்சேரலாதன் ஏவினான் என்று ஒரு பாடல் கூறுகிறது[5]. இவனது மகன் செங்குட்டுவன் கடம்பறுத்தவன்


  1. பதிற். 11 : 12 - 14, 12 : 1 - 3, 17 : 4 - 5, 20 : 2 - 4
  2. ஷை 20 : 2
  3. ஒப்புநோக்கு, வேம்பு ― வேம்பன், முருகனைக் கடம்பன் என்று அழைப்பது வழக்கம். இவன் அந்தக் கடவுள் முருகன் அல்லன்.
  4. அகம். 347 : 3 - 4
  5. பதிற். 11 : 12