உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

45


நிறைவேற்ற அரசன் செய்வது குறித்துப் பார்ப்பாரிற் பெரியாரைக் (நெடும்பாரதாயனாரைக்) கேட்டான்.

கௌதமனார் பெயரில் பத்து வேள்விகள் செய்ய வேண்டும் என்றார். வேண்டியனவெல்லாம் கொடுத்து நெடும்பாரதாயனாரையே வைத்து அந்த வேள்விகளை முறைப்படி நடத்தினான். தாயனார் ஒன்பது வேள்விகள் செய்தார். பத்தாம் வேள்வியில் புலவரும் அவரது மனைவி பார்ப்பனியும் மறைந்தனர் என்பதனால் அவர்கள் இறந்துவிட்டனர் என்று தெரிகிறது. இது அவர்கள் அடைந்த சுவர்க்கம். இந்தச் செய்தியானது பதிகத்தில் காணப்படுகின்றது.

பண்புநலம்

தன் வாய்ச்சொல்லாலும் தனக்கிருந்த செல்வாக்காலும், தன் குறிப்புப் பார்வைகளாலும், தான் கேள்விப்பட்ட செய்திகளைக் கொண்டு பிறர்க்கு நெஞ்சாலும் தீமை எண்ணாத கொள்கை உடையவனாய்க் பல்யானைச் செல்கெழு குட்டுவன் விளங்கினான்[1]. நீர், நிலம், தீ, வளி, விசும்பு என்னும் ஐம்பூதங்களை அளந்தறிந்தாலும் அவற்றின் தன்மைகள் அமையப் பெற்றிருந்த இவனது பண்புகளின் பெருமையை அளந்தறிய முடியாது[2]. காலை நேரத்தில் பிறக்கும் தெளிவைப்போல இவனது வாயிலிருந்து பிறக்கும் சொற்கள் அமைந்திருந்தன[3].

தோற்றப் பொலிவு

இவனது மார்பில் எப்போதும் சந்தனம் படிந்திருந்தது[4]. போர்ச் சின்னமாகிய உழிஞைப் பூவையும் இவன் பொன்னால் செய்து அணிந்து கொண்டான்[5]. இவனது மாலையும் பொன்னால் செய்யப்பட்டது[6].

துறவிக்குப் பணிவிடை

இத்தகைய போர்த்திறனும், கொடை உள்ளமும், நற்பண்புகளும், ஆடம்பர வாழ்வும் கொண்டிருந்த இவன் காட்டுக்குச் சென்றான். இவனைப் பாடிய புலவரின் விருப்பத்தை நிறைவேற்ற நெடும்பாரதாயனார் உதவினார். உதவிய தாயனாரின் விருப்பத்தை நிறைவேற்ற இவன் காட்டுக்குச் சென்றான். அங்குத் தாயனாரின் தவத்திற்கு இடையூறு வாராமல் காத்து நின்றான் எனலாம்[7].


  1. பதி 21 : 3 - 4
  2. ஷை 24 : 15 - 16
  3. ஷை 21 : 4
  4. 'மண்படு மார்ப', பதிற். 21 : 19
  5. பதிற். 22 : 27
  6. ஷை 23 : 10
  7. ஷை பதி. 3 : 10 - 11