உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

55


என்னும் பதிற்றுப்பத்து ஐந்தாம் பதிகத்தின் தொடர் கூறுவது சோழன் மகள் நற்சோணையையே குறிக்கும்.

ஆட்சியின் தொடக்கநிலை

இவனது தந்தை நெடுஞ்சேரலாதன் குடநாட்டு மாந்தை நகரில் இருந்துகொண்டு தனது ஆட்சியைத் தொடங்கினான். சிறிய தந்தை பல்யானைச் செல்கெழு குட்டுவன் குட்டநாட்டு வஞ்சியில் இருந்து கொண்டு ஆட்சியைத் தொடங்கினான். அண்ணன் நார்முடிச் சேரல் குன்ற நாட்டில்[1] தனது ஆட்சியைத் தொடங்கினான். இவன் குட்டநாட்டுக் கிழக்குப் பகுதியையும் பூழி நாட்டையும் தன்னகத்தே கொண்ட பகுதியில் இருந்து ஆட்சி செய்தான். இந்த ஆட்சித் தொடக்க நிலைகள் தந்தை அரசாண்ட காலத்திலேயே நாடுகாவல் பணி என்ற முறையில் அமைந்தவை[2].

முசிறித் துறைமுகம் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்று இவனைப் பதிற்றுப்பத்தில் பாடிச் சிறப்பித்த பரணர் குறிப்பிடுகிறார்[3]. வஞ்சி மாநகரில் இருந்துகொண்டு இவன் நாடாண்டதைச் சிலப்பதிகாரம் விளக்கமாகக் கூறுகிறது. இவை, இவன் தனது முன்னோருக்குப் பின் முழுமை பெற்றுப் பேரரசனாக, சேரநாட்டுக்கெல்லாம் பெரு வேந்தனாக விளங்கிய காலத்து நாட்டுப் பரப்பு எனக் கொள்வது பொருந்தும்.

மோகூர்ப் போர்

'மோகூர் மன்னன் முரசங்கொண்டு'[4] என்பதால் இப்போர் நிகழ்ச்சி சிறப்புடையது. இது பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊராகும்[5]. பழையன் என்பவன் இவ்வூரை ஆட்சிபுரிந்து வந்தான். இவனைத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனது படைத் தலைவனாக விளங்கிய பழையன் மாறன் எனக் கொள்வதும் பொருத்தமாகும்.


  1. குட்ட நாட்டுக்கும் வேணாட்டுக்கும் இடையில் கிழக்குப் பகுதியில் இருந்த நாடாகும்.
  2. துரைசாமி பிள்ளை, ஔவை, 'சேர மன்னர் வரலாறு', பக். 151
  3. புறம். 343 : 10
  4. பதிற். 44 : 14, 49 : 8 - 9, பதிற். பதி. 13 - 14
  5. இந்த மோகூர் இப்போது மதுரை வட்டத்தில் மோகர் என்னும் பெயருடன் வழங்கும் ஊர் என்றும், நாமக்கல் வட்டத்தில் மோகனூர் என்னும் பெயருடன் வழங்கும் ஊர் என்றும் பலவாறு கருதப்பெறுகிறது. 'மோகர்' என்பது பொருத்தமெனத் தோன்றுகிறது.