உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பண்டைத் தமிழக வரலாறு:
சேரர் - சோழர் - பாண்டியர்



இத்தொகுதியில் உள்ள கட்டுரைகள், தமிழ் வளர்ச்சித் துறை மூலம் வெளிவந்த 'தமிழ்நாட்டு வரலாறு; சங்ககாலம் - அரசியல்' எனும் நூலில் இடம் பெற்றவை ஆகும். வேறு சில இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தமது இறுதிக் காலங்களில் எழுதியவை இவை. அவரது மறைவிற்குப் பின்பே அச்சிடப்பட்டவை. அவரது ஐம்பது ஆண்டு கால ஆய்வின் அனுபவங்களைக் கண்டறியும் வகையில் இக்கட்டுரைகள் அமைந்திருப்பதாகக் கருதலாம்.

சங்க இலக்கியப் பிரதிகளில் காணப்படும் செய்திகளை முதன்மையாகக் கொண்டுள்ள இக்கட்டுரைகள், அக்காலத்திய பிற தகவல்களையும் இணைத்து எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். முற்காலச் சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் குறித்த முழுமையான செய்திகளை இக்கட்டுரைகள் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இத்தொகுதியில் காணப்படும் செய்திகளுக்கு மூலத்தரவாக அமைந்திருப்பவை சங்க இலக்கியப் பிரதிகளே ஆகும். சங்க இலக்கிய மேற்கோள்கள் வழி கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.

சேர அரசர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் இருந்த பிற அரசர்கள், சேர மன்னர்களின் அரசவைப் புலவர்கள், அவர்கள் உருவாக்கிய சங்கங்கள் குறித்த விரிவான பதிவுகளை மயிலை சீனி. வேங்கடசாமி செய்துள்ளார். பாரதப் போருக்கும் சேர மன்னர்களுக்குமாகிய உறவு குறித்து 'பெருஞ்சோறு' அளித்தல் மூலம் பெரிதும் விவாதிக்கப் படுகின்றது. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள், பாரதப் போருக்கும் சங்க காலத்திற்கும் உண்மையில் தொடர்புண்டா? என்பதை விவாதிக்கிறார். அதன்மூலம் பெருஞ்சோறு அளித்தல் என்பதன் பல்வேறு கோணங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளார். இக்கட்டுரை