உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

69


இவனேயன்றி இவனது நாட்டு மக்களும், தம்மிடமிருந்த பல வகை வளங்களையும் பகுத்துண்ணும் பண்பினராய் விளங்கினர். அவர்கள் நெறி தவறாது அறம் புரிந்து வாழ்ந்து வந்தனர்[1].

இவன் பார்ப்பனர்க்குப் பசுக்களைக் கொடுத்ததோடு தான் ஆண்ட குடநாட்டில் ஓர் ஊரை அவர்களின் நல்வழ்வுக்கென்று ஒதுக்கிக் கொடுத்தான்[2].

இவனைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் சிறப்பித்துப் பாடினார். அவர் பெண்பாற் புலவர். அப்புலவரைச் சிறப்பித்து அவன் பரிசில்கள் வழங்கினான்; அவர் நகை செய்து போட்டுக் கொள்ளவேண்டி ஒன்பது கா நிறையுள்ள பொன் கொடுத்தான்; செலவுக்காக நூறாயிரம் காணம் பணம் கொடுத்தான். இவற்றிற்கு மேலாக தன் பக்கத்தில் அமர இருக்கை அளித்துப் பெருமைப்படுத்தினான்[3].

பண்பு நலம்

இவனது கை இரப்போர்க்குக் கொடுப்பதற்காகக் கவிந்ததேயன்றி, எதை விரும்பியும் மலர்ந்ததில்லை[4]. பிறரை விரும்பி அவர்களுக்கு நலம் பயப்பனவற்றைச் செய்யும் நெஞ்சப் பாங்கு உடையவன்[5]. 'இன்று வாண்மறவர் வென்று கொடுத்த உணவை உண்டோம். நாளை கோட்டை கடந்தபின்தான் உணவு' என்று போர்க் காலத்திலும் பொய் கூறாது உண்மையையே பேசி வந்தான்[6]. 'பகைவர் திறைதரின் அவற்றை ஏற்று அவர்களைப் பணிகொள்வாயாக' என்று இவன் அறிவுரை கூறப்பட்டுள்ளான்[7]. இதனைப் பார்க்கும்போது பகைவர் பணிந்தாலும் அவர்களை ஏற்காத பண்பினனாக ஒரு காலத்தில் விளங்கினான் என்பது பெறப்படும்.

சிறப்புச் செயல்கள்

இவன் ஆடல் கலையில் தேர்ச்சி மிக்கவன்[8]. விழாக் காலத்தில் விளக்கொளியில் கோடியர் முழவு முழங்க மைந்தரும் மகளிரும்


  1. ஷை 59 : 16
  2. பதிற். பதி. 6 : 4 - 5
  3. .......
  4. ......
  5. பதிற். பதி. 6 : 10 'நாடல் சான்றநயனுடை நெஞ்சின்'
  6. பதிற். 58 : 8 - 9
  7. ஷை 59 : 11 - 13
  8. ......