உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

73


அண்ணன் தம்பியருக்கிடையே அகவை இடைவெளி ஐந்து என்று பொதுவகையாகக் கொள்வோமானால், செங்குட்டுவனின் அண்ணன் நார்முடிச் சேரல் கி.பி. 120-ல் அரியணை ஏறினான் என்றும் செங்குட்டுவனது தம்பி கி.பி. 130-ல் அரியணை ஏறினான் என்றும் கொள்ளலாம். இவ்வாறு கணிக்கும்போது நார்முடிச்சேரல் கி.பி.120 முதல் 145 வரை அரசாண்டான் என்றும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் கி.பி. 130 முதல் 168 வரை அரசாண்டான் என்றும் முடிவதைக் காணலாம்.

தந்தைக்கும் மூத்த மகனுக்கும் இடைவெளி அதாவது, ஒரு தலைமுறை 25 ஆண்டுகள் என்று கொள்வோமானால் நார்முடிச் சேரலுக்கும் அவனது தந்தைக்கும் அரியணையேறிய தொடக்க ஆண்டுகள் முறையே கி.பி.120, கி.பி. 95 என்று அமைவதைக் காணலாம். இந்த முறையில் 50 ஆண்டுகள் அரசாண்ட நெடுஞ்சேரலாதன் கி.பி. 95-145 ஆண்டுகளில் அரசாண்டான் எனலாம். இவனது தம்பி பல்யானைச் செல்குழு குட்டுவன் கி.பி. 100-125 ஆண்டுகளிலும், இவர்களின் தந்தை உதியஞ்சேரல் கி.பி. 70 -95 ஆண்டுகளிலும் அரசாண்டனர் என்று முடியும். இந்த அரசாட்சி முறையை அடுத்துள்ள அட்டவணையில் காணலாம். இது பிற சமகால அரசர்களை ஒப்புநோக்கி ஆராயப் பெரிதும் உதவும்.

இனி இவர்களது நாடு, தலைநகர், போர்களும் அவற்றின் முடிவுகளும் ஆகியவற்றை அடுத்துக்காணும் பட்டியலில் காணலாம்.