உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


கொண்டு போருக்குச் சென்றனர்[1]. உடம்பெல்லாம் வாள் பட்ட தழும்பு வரிகளும் மார்பில் வேல் பாய்ந்த விழுப்புண் தழும்புகளும் உடையவர்கள் அவர்கள்[2]. போர் தொடங்கினால் இடையில் உணவைப் பற்றிக்கூட அவர்கள் கவலைப்படமாட்டார்கள். பகை வேந்தர் பட்டத்து யானையின் தந்தம், தாம் உண்ட கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு எளிய பொருள்[3].

கொடைத் தன்மை

இவன் சிறந்த வள்ளல்; தன் நாண்மகிழ் இருக்கையில் கொடை விழாக் கொண்டாடிப் பரிசிலர்களுக்கு வேண்டியன வெல்லாம் கொடுத்தான்[4]. சேரநாட்டுப் பந்தர்த் துறைமுகத்தில் கிடைத்த முத்து,[5] களிறு, மா, ஆநிரை, கதிரடித்துக் குவித்துள்ள களம்[6] முதலானவை அவன் வழங்கிய கொடைப் பொருள்கள்.

அக்கொடைப் பொருள்களை அவன் மழையைக்காட்டிலும் மிகுதியாகக் கொடுத்தான்; பாலைப் பண்ணில் பையுள் இசைத் திறத்தைக் கட்டினால் செவிகளில் பாயும் அருளின்பம் போலப் பரிசிலர் உள்ளம் இன்புறும்படி நல்கினான்;[7] அலர்ந்த நெய்தல்போல் மலர்ந்த முகத்துடன் கொடுத்தான்;[8] பெற்றவர்கள் கனவோ என்று மருளும்படி நனவில் கொடுத்தான்;[9] ஏற்றவரின் வறுமையெல்லாம் நீங்கும்படி அளித்தான்[10]. கொடுக்கும்போது பெறுபவர்களின் சிறுமையை அளவுகோலாக இவன் கொண்டதில்லை. தன் பெருமையின் தகவையே அளவுகோலாகக் கொண்டான்[11].

பரிசில் நாடிவரும் வயிரியர்களைத் தன் அரண்மனைக்கு வெளியில் கண்டபொழுதே குதிரைகளுக்கு அணிகலன்களைப் பூட்டிப் பரிசிலாக அனுப்பி வைத்தான். பாசறையிலும் போர்க்களத்திலும் இருந்தபோதும் கொடுத்தான்[12]. நாண்மகிழ் இருக்கையில் நடந்த கொடைப்போரில் பாடினிக்கே வெற்றி[13].


  1. பதிற். 66 : 15
  2. ஷை 66 : 13 - 14
  3. ஷை 68 : 11
  4. பதிற். 65 : 13
  5. ஷை 67 : 2, 5
  6. புறம். 387 : 22 - 25
  7. பதிற். 65 : 11 - 16
  8. ஷை 64 : 16 - 17
  9. புறம். 387 : 16
  10. ஷை 387 : 12 - 13
  11. ஷை 387 : 29 - 32
  12. பதிற். 64 : 8 - 10, 67
  13. ஷை 61 : 15 - 16, ஒப்புநோக்குக சேரலாதனின் கோட்டையை வயிரியர் அழித்து உண்டனர் (பதிற்.20:17-20)