உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

89


தன் வெற்றிக்கு அறிகுறியாகப் போர்க்களத்திலேயே களவேள்வி ஒன்று செய்தான். வெற்றிக்கு உதவியவர்களுக்கு வேண்டியவற்றைப் போர்க்களத்திலேயே நல்கல் களவேள்வி எனப்படும்.

மகளிர் வருந்தும் வண்ணம் அவர்கள் முன்னிலையிலேயே பகைவர்களை இவன் கொன்றான்[1]. இத்தகைய கொடுமையை வீரம் என்று கருதியது வியப்பே.

'புகார்ச் செல்வன்' என்று இவன் கூறப்படுவது புகார் நகரில் வளர்ந்தமை நோக்கி என்று முன்னமே கூறியுள்ளோம். புகார் நாட்டை வென்றதால் இவன் இவ்வாறு கூறப்பட்டான் என்று இதற்குப் பொருள் கொள்வாரும் உளர். இப்பொருள் சிறப்பின்று. எனினும் கொல்லி மலைப் போரில் அதியமானுக்குத் துணையாக வந்த இருவேந்தர்களுள் சோழனும் ஒருவன். ஆகையால், அவனை வென்றமை நோக்கி இவ்வாறு கூறப்பட்டான் எனக் கொள்ளுதலும் ஒருவகையில் அமையும். அவ்வாறாயினும் சோழநாட்டைத் தாக்கி வென்றான் என்றோ அதனால் புகார் நாட்டைத் தன் ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்தான் என்றோ கூறுவது பொருந்தாது.

தகடூர் வெற்றி

அதியமானின் மகன் எழினி[2]. அதியமான் கொல்லிமலைப் போரில் சேரனிடம் தோற்றபின் பசும்பூட் பாண்டியனது படைத்தலைவனாக அமர்ந்துவிட்டான்[3]. கொல்லிமலைப் போரில் வெற்றிபெற்ற பெருஞ்சேரல் அதியமானின் தலைநகரான தகடூரைத்[4] தாக்கினான். தன் தந்தை அதியமானுக்குத் துணையாகக் குதிரைமலைப் பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்த எழினி, தன் தந்தையின் தலைநகரைக் காக்க விரைந்து வந்து போரிட்டான்.

தாமரைப் பூக்களையும், நெய்தல் பூக்களையும் வீசி மகளிர் கிளிகளை ஓட்டும் வளம்மிக்க பகுதிகளை உடையதாக அக்காலத் தகடூர் விளங்கியது. அத்தகடூரைச் சுற்றிக் காவற்காடு இருந்தது. இந்தக் காட்டரண் போர்வீரர்களின் பயிற்சிக்களமாக விளங்கியது. தேர்ச்சி-


  1. ஷை பதி. 8 : 8 (மகளிர் இரங்கத் துப்பறுத்து)
  2. புறம். 230 : 6
  3. அந்தப் பாண்டியனுக்காக நன்னனை எதிர்த்துப் போராடி மாண்டதை அவனது வரலாற்றில் காணலாம்.
  4. தர்மபுரி