உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

அந்நகரத்தின் முக்கியமான ஒரு இடத்திலே பலரும் வந்து அறவுரை கேட்பதற்குக் காத்தியானி அம்மையார் ஏற்பாடு செய்தார். சோணன் குட்டிக் கண்ணர் இந்த இடத்தில் சென்று நாள்தோறும் அறவுரை கூறி விரிவுரை வழங்கினார். மக்கள் திரண்டுவந்து கேட்டு மகிழ்ந்தார்கள். காத்தியானி அம்மையாரும், தமது மாளிகையில் உள்ள ஏவலாளர், பணிவிடையாளர் எல்லோரும் அறவுரை கேட்பதற்காக விடுமுறையளித்துத் தாமும் சென்று அறவுரை கேட்டார். அவர் மாளிகையில் ஒரே ஒரு வேலைக்காரி மட்டும் தங்கியிருந்தாள்.

காத்தியானி அம்மையார் பெருஞ்செல்வம் உள்ள பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறினோமல்லவா? அக்காலத்தில் அந்த நகரத்திலே கொள்ளையடிக்கும் கள்ளர் இருந்தனர். அவர்கள் காத்தியானி வீட்டுச் செல்வத்தின்மேல் நெடுங் காலமாகக் கண் வைத்திருந்தார்கள். எப்போது சமயம் வாய்க்கும் என்று அவர்கள் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அம்மையார் வேலைக் காரர்களுடன் அறவுரை கேட்கும் செய்தியை அறிந்து, இதுவே தகுந்த சமயம் என்று தெரிந்து அம்மையார் வீட்டில் கொள்ளையடிக்கச் சென்றார்கள் கன்னம் வைத்து வீட்டிற்குள் புகுந்து பொருள்களையும் பணங்காசு களையும் கொள்ளையிடத் தொடங்கினார்கள். கள்வர் தலைவன், அம்மையார் அறவுரை கேட்கும் கூட்டத்திற்கு வந்து ஒரு புறமாக இருந்து அம்மையாரைக் கண்காணித்துக் கொண்டிருந்தான். தன் வீட்டைக் கள்ளர் கொள்ளையிடுவதை அறிந்து, அம்மையார் கள்ளரைப் பிடிக்க முயற்சி செய்தால் அப்போது அவரைக் கத்தியால் குத்திக் கொன்றுவிடுவதற்காகத்தான் கள்ளர் தலைவன் அங்குச் சென்றிருந்தான்.

வீட்டிற்குள் புகுந்த கள்ளர்கள் செம்பு நாணயங்கள் வைத்திருந்த அறைக்குள் புகுந்து அதை வாரி மூட்டை கட்டினார்கள். கள்ளர் புகுந்து கொள்ளையிடுவதைக் கண்ட ஊழியப் பெண், அம்மையாரிடம் விரைந்து வந்து செய்தியைச் சொன்னாள். இதனைக் கேட்ட அம்மையார், “நல்லது; அதைப் பற்றிக் கவலையில்லை” என்று கூறிச் சொற் பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார். வீட்டிற்குத் திரும்பிச் சென்ற ஊழியப் பெண், இப்போது கள்ளர் வெள்ளி நாணயங்கள் வைத்துள்ள அறையில் புகுந்து வெள்ளிக் காசுகளை மூட்டை கட்டிக் கொண்டிருப் பதைக் கண்டாள். ஆத்திரங்கொண்டாள். ஆகவே, அவள் மறுபடியும் ஓடோடிச் சென்று அம்மையாரிடத்தில் வெள்ளிக் காசுகள் பறி