உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

நற்கலை, நுண்கலை, கவின்கலை என்று சொல்லப்படுகிற அழகுக் கலைகளை ஐந்து பிரிவுகளாகக் கூறுவர். கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என்னும் ஐந்தும் அழகுக் கலைகளில் அடங்குவன. பழமை வாய்ந்த இந்த அழகுக் கலைகளில் மிகப் பழமையானது இசைக்கலை. கூத்தும் நாடகமும் இசைக் கலையைச் சேர்ந்தவை. ஆதிகாலம் முதல் இசைக்கலை மக்களின் மனதைக் கவர்ந்து வருகிறது. உலகத்திலே ஒவ்வொரு தேசத்தாரும் அவரவர் மரபுக்கும் இயல்புக்கும் தட்ப வெப்ப நிலைக்கும் இசைந்த படி இசைக்கலையை வளர்த்துள்ளார்கள். இசையுடன் யாழ், குழல், முழவு முதலான இசைக் கருவிகள் மிக நெருங்கிய தொடர்புடையன. இசைக்கலையும் கூத்துக் கலையும் சகோதரிகள்-தமக்கை தங்கையர். இசைக்கலை செவிக்கு இதந்தருகிறது. கூத்துக்கலை கண்ணுக்குக் காட்சி அளிக்கிறது. இசையும் கூத்தும் ஒன்றாகச் சேரும்போது அவை ஒரே சமயத்தில் காதுக்கும் கண்ணுக்கும் இன்பம் பயந்து மனத்தை மகிழ்விக்கின்றன.

இசையும் கூத்தும் ஏனைய நாடுகளில் வளர்ந்து வருவது போலவே நம்முடைய பாரத தேசத்திலும், சிறப்பாகத் தமிழ் நாட்டிலும் தொன்று தொட்டு வளர்ந்து வருகின்றன. பழந்தமிழர் வளர்த்த முத்தமிழில் இசைத் தமிழும் நாடகத் தமிழும் இடம் பெற்றிருந்தன. இசையையும் நாடகத்தையும் நடத்துவதற்கென்றே பாணர் என்னும் இனம் பழங்காலத்தில் தமிழகத்தில் இருந்தது. பாணரில் பெரும்பாணர் என்றும் சிறுபாணர் என்றும் இரு வகையோர் இருந்தனர். பாணர் இனத்து மகளிரும் இசைக் கலையிலும் கூத்துக்கலையிலும் நாடகக் கலையிலும் வல்லவர். அவர்கள் விறலி என்றும் பாடினி என்றும் பெயர் பெற்றனர். அவர்கள் இசைக் கருவிகளைத் திறம்பட வாசிப்பதிலும் வல்லவர்கள். பிற்காலத்திலே பாணர் இனம் மறைந்து போயிற்று. பாணரைப் பற்றியும் விறலியரைப் பற்றியும் பழந்தமிழ் இலக்கியத்தில் படிக்கிறோம். பிற்காலத்தில் இசைவேளாளர் என்னும் இனத்தார் தமிழகத்தில் இசைக் கலையையும், நாட்டியக் கலையையும் நன்றாக வளர்த்து வந்தனர். வளர்த்து வருகின்றர். பரதநாட்டியம் தமிழ் நாட்டுக்கே உரிய உலகப் புகழ் பெற்ற அழகுக் கலையாகும்.