உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

ஏமநாதன் தன்னுடைய மனத்துக்குள்ளே சிந்தித்தான்:

'என்ன பாணபத்திரனுடைய கடைமாணாக்கன்! உதவாக் கறை! உதவாக்கறையே இப்படி இசை பாடினால் இவனுடைய ஆசிரிய னுடைய இசை எப்படியிருக்கும்? நாளை நடக்க இருக்கும் போட்டியில் பாணபத்திரனை எப்படி வெல்ல முடியும்!' இவ்வாறு மனதுக்குள்ளே எண்ணிக்கொண்ட ஏமநாதன், “நீ இப்போது பாடின சாதாரிப் பண்ணை இன்னொரு முறை பாடுக” என்று கேட்டான்.

விறகுவெட்டி மறுபடியும் சாதாரிப் பண்ணைப் பாடினான். அவனுடைய பாட்டின் இசையும் யாழின் இசையும் இயைந்து தேனும் பாலும் போலக் கலந்து இனித்தது. அவன் பாடின பாட்டு முன்னையதை விட மிகச் சிறப்பாக இருந்தது. எல்லோரும் இசையைக் கேட்டுச் சொக்கி மயங்கி அதிசயித்து வியந்து பாராட்டினார்கள்.

“பொழுது சாய்ந்துவிட்டது. வயிற்றுப் பசிக்கு வழி தேடவேண்டும். இங்குப் பாடிக் கொண்டிருந்தால் என் வயிற்றுப் பாடு எண்ணாவது. நாழி அரிசிக்கு வழி தேட வேண்டும்” என்று சொல்லிக் கொண்டு அவன் விறகுக் கட்டைத் தூக்கித் தலை மேல் வைத்துக் கொண்டு, ‘விறகோ விறகு, விறகு வாங்கலையோ விறகு' என்று கூவிக்கொண்டே வீதியில் நடந்தான். அங்கிருந்தவர் களும் அவ்விடத்தை விட்டுக் கலைந்து சென்றனர். ஏமநாதன் மட்டும் அங்கு நின்ற வண்ணமே அசைவற்று நின்று விறகுவெட்டி தெருக்கோடியில் போகிறவரையில் அவனையே பார்த்துக்கொண்டிருந்து பிறகு பெருமூச்சு விட்டுக்கொண்டே வீட்டுக்குள் சென்றான். அவனுடைய மனதில் ஏதோ அச்சம் புகுந்து விட்டது. தனக்குள் ஏதேதோ எண்ணினான்.

'இவ்வளவு நேர்த்தியாக தேவகானம் பாடுகிற விறகு வெட்டி பாணபத்திரனுடைய கடை மாணாக்கன்! இவனை இசைப் பாட்டுக்கு உதவாதவன் என்று பாணபத்திரன் ஒதுக்கித் தள்ளி விட்டான்! அப்படியென்றால் பாணபத்திரன் எவ்வளவு சிறந்த கலைஞனாக இருக்க வேண்டும்! பத்திரனை இசைப் போட்டியில் வெற்றி கொள்வது கடினம் போலத் தோன்றுகிறது. நாளைக்கு அரச சபையில் தோற்று மானம் இழந்து இழி வடைகிறதைவிட சபைக்குப் போகாமலிருப்பது நல்லது. ஊரில் இருந்துகொண்டே சபைக்குப் போகாமலிருப்பது சரியன்று. இன்று இரவிலேயே ஊரைவிட்டுப் போய் விடுவதுதான் உத்தமம்.’ இவ்வாறு ஏமநாதன் தனக்குள் சிந்தித்துக் கொண்டிருந்தான்.