உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

6

கடுகு மருந்துக்கு உதவாது” என்று கூறிவிட்டு அடுத்த வீட்டிற்குள் நுழைந்தாள். அவ்வீட்டுக்காரியும் கடுகு கொடுத்த போது, “உங்கள் வீட்டில் யாரேனும் இறந்திருக்கிறார்களா?” என்று வினவினாள். இதைக் கேட்டவுடன் அவ்வீட்டுக்காரியின் கண்களில் நீர் தாரை தாரையாக வார்ந்தது. விம்மிவிம்மி அழுதாள். “ஐயோ! மூன்றாம் நாள் தானே என் மகள் இறந்து போனாள்; நல்ல வெண்கலச் சிலை போல இருந்தாளே” என்று அழுதாள். “அப்படியானால் கடுகு வேண்டாம் என்று கூறிவிட்டு அடுத்த வீட்டிற்குச் சென்றாள். இப்படியே அந்தத் தெருமுழுதும், வீடுவீடாக நுழைந்து கேட்டாள். சில வீடுகளில் குழந்தைகள் இறந்திருந்தன. சில வீடுகளில் பெரியவர்கள் இறந்திருந் தார்கள். சில வீடுகளில் கட்டிளமை வயதுடையவர்கள் இறந்திருந்தார்கள். சில வீடுகளில் கர்ப்பவதிகள் இறந்திருந்தார்கள். ஆனால், சாகாதவர் வீடு ஒன்றுமில்லை. கௌதமை அடுத்த தெருவில் நுழைந்தாள். ஒரு வீடு டாமல் நுழைந்து கடுகு கேட்டாள். சாகாதவர் வீடு ஒன்றேனும் இல்லை. பல தெருக்கள் சென்று வீடுவீடாகக் கேட்டாள். ஒரு வீடுகூட விடாமல் சென்று கேட்டுப் பார்த்தாள். வேண்டிய கடுகு கிடைத்தது; ஆனால், சாகாதவர் வீடுதான் கிடைக்கவில்லை. அவளுக்கு அப்போது தான் உண்மை புலப்பட்டது. சாகாத வீடு கிடைக்காது. ஆகவே, தன் குழந்தை பிழைக்க, மருந்துக்குக் கடுகு கிடைக்காது என்பதை உணர்ந்தாள். ஆனால், ஏதேனும் ஒரு வீடாவது இருக்காதா என்கிற ஆசை அவள் மனத்தில் இருந்தது. ஆகவே, அவள் அந்த சிராவத்தி நகரம் முழுதும், ஒரு வீடு விடாமல் நுழைந்து கேட்டுப் பார்த்தாள். சாகாதவர் வீடு கிடைக்கவே இல்லை. எல்லா வீடுகளும் செத்தவர் வீடுகள்தான். சூரியன் மறைந்தான்; இருள் சூழ்ந்தது. இருளைப் போக்க வீடுகளிலும் தெருக்களிலும் விளக்கேற்றினார்கள். கௌதமையின் மனத்தில் இருந்த மன மருட்சி - இறந்தவர் பிழைக்க மருந்து உண்டு என்னும் அறியாமை நீங்கிவிட்டது. பிறந்தவர் எல்லோரும் இறக்கிறார்கள். அகவை முகிர்ந்தவர் என்பது மட்டும் அல்ல. நடுத்தர அகவையுள்ளவர், கட்டிளைஞர், சிறுவர், குழந்தைகள் எல்லோரும் இறக்கிறார்கள். இறந்தவர் மறுபடியும் பிழைப்பது இல்லை என்கிற உண்மை அவள் மனத்தில் தோன்றிற்று. அவள் நேரே சுடுகாட்டிற்குச் சென்றாள். தன் தோள்மேலிருக்கும் இறந்த குழந்தையை அடக்கம் செய்தாள். பிறகு நேரே பகவன் புத்தரிடம் வந்து அவர் காலில் விழுந்து வணங்கி எழுந்து நின்றாள்.