உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

கொடுக்கிறவர்களுக்கும் கொடாதவர்களுக்கும் கொடு என்றால் உன் உற்றார் உறவினர் உன்னிடம் ஏதேனும் உதவியைக் கோரினால், அதை அவர்கள் திருப்பிக் கொடுத்தாலும், கொடா விட்டாலும் அவர்களுக்குக் கொடுத்து உதவி செய் என்பது பொருள்.

சிரித்துக்கொண்டு உட்காரு என்றால், மாமன், மாமி, கணவன் இவர்களைக் கண்டால் உட்கார்ந்திராமல் எழுந்து நில் என்பது அர்த்தம், சிரித்துக்கொண்டு சாப்பிடு என்றால், மாமன், மாமி, கணவன் இவர்கள் சாப்பிட்ட பிறகு சாப்பிடு என்பது கருத்து.

சிரித்துக்கொண்டு தூங்கு என்றால், மாமன், மாமி, கணவன் இவர்கள் தூங்குவதற்கு முன்பு தூங்காதே என்பது, இவர்களுக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளைச் செய்த பிறகு தூங்கு என்பது கருத்து.

எரி ஓம்பு என்றால், மாமன், மாமி, கணவன் இவர்களைத் தீச்சுடர் போலக் கருதி நடந்துகொள் என்பது.

குலதெய்வங்களை வழிபடு என்றால், மாமன், மாமி, கணவன் இவர்களைக் குடும்பத் தெய்வம்போல எண்ணி இவர் களைப் போற்றி வழிபடு வேண்டும் என்பது.

இவற்றைக் கேட்டபோது மாமனாருக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாயின. அவர்கள் விசாகையின் அறிவைப் புகழ்த்தார்கள். மாமனார், அன்று முதல் விசாகை யிடத்தில் நன்மதிப்புக் கொண்டார்.

விசாகை நெடுங்காலம் வாழ்ந்து, பேரன் பேத்திகளைப் பெற்றெடுத்துப் பெருவாழ்வு வாழ்ந்தார். இவர் பகவன் புத்தரின் முக்கியமான சிராவகத் தொண்டராக இருந்து, புத்தருக்கும் பௌத்த சங்கத்துக்கும் அரிய பெரிய தொண்டுகளைச் செய்து வந்தார். பௌத்தப் பிக்குகள் தங்கி வசிப்பதற்கு விகாரைகளைக் கட்டிக் கொடுத்ததோடு, அவர்களுக்கு அவ்வப்போது தான தருமங்களைச் செய்துவந்தார். தமது முதுமைக் காலத்திலே துறவு பூண்டு பௌத்த பிக்குணியாக இருந்து, பேர்பெற்ற தேரியாக விளங்கி, இறுதியில் வீடுபேறடைந்தார். பௌத்தர்களின் ஏழு சிறந்த பெண்மணிகளில் இவர் ஒருவர்.

அடிக்குறிப்புகள்

1. தீக்குச்சியும், தீப்பெட்டியும் இல்லாத காலம் அது. அக்காலத்தில் அண்டை அயலில் உள்ளவர் ஒருவர்க்கொருவர் நெருப்பைக் கொடுப்பதும் கொள்வதும் வழக்கம்.