உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் 47

இருக்கும் புற்றிலிருந்த பாம்பு அவனைக் கடித்திருக்க வேண்டும். ஆகவே, அவன் விஷம் ஏறிப் பிணமாய்க் கிடக்கிறான். இந்தக் காட்சியைக் கண்டவுடன் அவளுக்குச் சந்தோஷமும் துக்கமும் கலந்து அவள் உள்ளத்தைத் தாக்கின. அவள் கணவன் அவளைக் கைவிட வில்லை என்று நினைக்கும்போது உண்டானது சந்தோஷம். அவன் குடிசை கட்டப் புல்லையும் கிளைகளையும் வெட்டி இருப்பதே அவளை அவன் கைவிடவில்லை என்பதற்குச் சான்று. பாம்பு கடித்து இறந்ததற்காக உண்டானது துக்கம். அவள் மனம் பொறாமல் அவன் மேல் விழுந்து அழுதாள். ஓவென்று கதறினாள். காடும் கரையும்படி அழுது புலம்பினாள். இந்த நடுக்காட்டில் இவளுக்கு ஆறுதல் கூற ஒருவரும் இலர். நன்றாகப் பொழுது புலர்ந்துவிட்டது. வெயில் காயத் தொடங்கிற்று. இப்போது வானத்தில் மேகங்கள் இல்லை.

மனத்துயரம் தாங்கமுடியாமல், தான் இருக்கும் திக்கற்ற நிலையை நினைத்து நெஞ்சுருகினாள். தான் இப்போது செய்ய வேண்டியது என்ன என்று சிந்தித்தாள். சிராவத்தி நகரம் சென்று தன் உறவினரை அழைத்துக் கொண்டு வந்து இறந்தவனை அடக்கம் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று எண்ணினாள். ஆகவே, குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு காட்டு வழியே நடந்தாள்.

6

சிராவத்தி நகரத்திலே பெரிய பிரபு ஒருவர் இருந்தார். அந்தப் பிரபுவுக்கு ஒரே பெண்ணும் ஒரே மகனும் ஆக இரண்டு மக்கள் இருந்தனர். மகள் பெரியவளாக வளர்ந்து மணம் செய்யும் வயதடைந்தாள். வயதடைந்திருந்த அவள், அந்த மாளிகையில் வேலை செய்யும் ஏவலாளர்களில் ஒரு வாலிபனுடன் கூடாவெழுக்கம் கொண்டாள். பிரபு, அவளுக்குத் தக்க இடத்திலே திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். இதையறிந்த அந்தப் பெண், தன் காதலனாகிய வேலைக்காரனுடன் ஒருவரும் அறியாமல் புறப்பட்டு ஒரு கிராமத்திற்குப் போய்விட்டாள். கிராமத்திலே, அப்பிரபுவின் மகள் அவனுடன் வாழ்ந்து வந்தாள். அவன் ஏதோ தொழில் செய்து அவளைக் காப்பாற்றி வந்தான். சில மாதங்களுக்குப் பிறகு அவள் வயிறு வாய்த்தாள். சூல் முதிரமுதிர அவள், தனக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லாததை அறிந்து, தன்னைத் தன் பெற்றோர் வீட்டிற்குக் கொண்டுபோய் விடும்படி, தன் கணவனிடம் கூறினாள். பெற்ற மனம் பித்து என்பார்களே! தன் குற்றத்தைத் தன் பெற்றோர் மன்னித்துத் தன்னுடைய பிள்ளைப்பேறு காலத்தில் தன்னைக் கவனிப்பார்கள்