உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

99

குண்டலகேசியார் அங்கு வந்து, நாவல் கிளை கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு வியப்படைந்து “இப்படிச் செய்தவர் யார்” என்று கேட்டார். அங்கிருந்தவர் சாரி புத்திர தேரர் இப்படிச் செய்தார் என்று கூற, குண்டல கேசியார், அந்நகர மக்களை அழைத்துச் சபை கூட்டச் செய்தார். நகரத்திலே ஐயம் ஏற்று ஆகாரம் உண்ட பின் சாரிபுத்திர தேரர் சபைக்கு வந்துசேர்ந்தார். குண்டலகேசியார் முதலில் கேள்விகள் கேட்பதென்றும், அதற்குச் சாரிபுத்திரர் விடைகூறவேண்டும் என்றும் ஏற்பாடு செய்து கொண்டு, அதன்படி கேசியார் கேள்விகளை ஒவ்வொன்றாகக் கேட்டார். சாரிபுத்திரர் அக்கேள்விகளுக்குக்குத் தகுந்த விடைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒன்றன்பின் ஒன்றாகப் பல கேள்விகள் கேட்டாய் விட்டன. மேலும் எதைக் கேட்பதென்று தோன்றாமல் பத்திரையார் வாளா இருந்தார். அப்போது, சாரிபுத்திரர் தாம் கேட்கும் கேள்விக்கு விடை கூறவேண்டும் என்று கூற, பத்திரையார் உடன்பட்டார். தேரர், “ஏகம் நாமகிம்?” (ஒன்று, அது யாது?) என்று கேட்டார். கேசியார் இதற்குப் பல விடை சொல்ல முடியும் என்று கருதினார். ஆனால், தகுந்த விடை கூற முடியாமல் திகைத்தார். பலவாறு யோசித்தும் விடை கூற முடியவில்லை. கடைசியில் தாம் தோல்வியடைந்து விட்டதாகக் கூறி, சாரிபுத்திரை வணங்கினார். அவர் கேட்ட கேள்விக்கு அவரே விடை கூறித் தெரிவிக்க வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டார். இதற்கு விடை தாம் கூற முடியு மானாலும், தமது குருநாதராகிய பகவன் புத்தரிடம் நேரில் கேட்டறிவது சிறப்புடையது என்று சாரிபுத்திரர் கூறினார். அதற்கு உடன்பட்டுக் குண்டலகேசியார், சாரிபுத்திரருடன் பகவன் புத்தரிடம் சென்றார்; சென்று பகவரை வணங்கி ஒரு புறமாக இருந்தார். பகவன் புத்தர் இதன் பொருளை நன்கு விளக்கிப் பத்திரைக்கு உபதேசம் செய்தார்.

பகவர் உபதேசத்தைக் கேட்டு மகிழ்ந்து வியந்த கேசியார் புத்தரை வணங்கி, தாம் பௌத்த சங்கத்தில் சேர விரும்புவதாகக் கூறினார். பகவர் இவரைப் பிக்குணி மடத்திற்கு அனுப்பி, இவரைப் பௌத்தத் துறவியாக்கினார்.

பௌத்தத் தேரியான பிறகு, குண்டலகேசியார் பௌத்த மதச் சாத்திரங்களையெல்லாம் துறைபோகக் கற்றுத் தேர்ந்து, பேரும்புகழும் பெற்று இறுதியில் வீடுபேறடைந்தார்.