உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

செடிகள், புதர்கள் முதலிய இடங்களில் தேடினாள். ஏரிக்கரையில் போய்த் தேடினாள். காடுமேடுகளில் தேடினாள். அவர்கள் விளையாடிய முயல்களும் மான் குட்டிகளும் வாத்துகளும் இருந்தன. அவர்கள் வைத்து விளையாடின பொருள்களும் கருவிகளும் இருந்தன. ஆனால், அவர்கள் காணப்படவில்லை.

எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு, மறுபடியும் போதி சத்துவரிடம் வந்து தலை குனிந்தவண்ணம், “ஏன் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீர்கள்? ஜாலியும், கண்ணாவும் எங்கே?” என்று கேட்டாள். போதி சத்துவர் விடை சொல்லாமல் மெளன மாகவே இருந்தார். அதனால், மேலும் துன்பம் அடைந்த மத்தி, காணாமற்போன குஞ்சுகளைத் தேடியலையும் கோழியைப்போல, மறுபடியும் போய் முன்பு தேடிய இடங்களையெல்லாம் தேடிப் பார்த்தாள். அவர்களைக் காணவில்லை. மறுபடியும் வந்து, “கணவரே, அவர்களைக் கொன்றவர் யார்? காக்கை குருவிகளும்கூட மௌனமாக இருக்கின்றனவே!" என்று கேட்டாள். அப்போதும் போதிசத்துவர் வாய்பேசாமல் அமர்ந்திருந்தார். மத்தி, மூன்றாந் தடவையும் போய்ப் பிள்ளைகளைத் தேடாத இடங்களில் எல்லாம் தேடினாள். அவர்கள் காணப்படவே இல்லை. அவள் அன்று நடந்து அலைந்தது பத்து யோசனை தூரம் இருக்கும்.

6

பொழுது விடியும் நேரம் ஆயிற்று. மத்தி, பல இடங்களிலும் தேடித் திரிந்து பிள்ளைகளைக் காணாமல், ‘அவர்கள் இறந்துபோனார்கள்' என்று தீர்மானம் செய்து கொண்டாள். துக்கத்தோடு போதி சத்துவரிடம் வந்தாள். தாங்கமுடியாத துன்பத்தி னால் அவள் நெஞ்சம் வெடித்து விடும் போலிருந்தது. தொப் பென்று கீழே விழுந்து பிணம் போலானாள். இதனைக்கண்ட வெசந்தரகுமாரன், “என் அருமை மத்தி இறந்து போனாள்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து தூக்கினார். “நீ நமது நாட்டில் இறந்துபோனால், எவ்வளவு சிறப்பாக உன்னை அடக்கம் செய்வார்கள். காட்டில் தன்னந்தனியனாய் இருக்கும் நான், உனக்கு என்ன செய்ய முடியும்?” என்று கூறி மனம் வருந்தினார். மத்தியின் மார்பில் கை வைத்துப் பார்த்தார். சூடு இருந்தது. கண்ணீர் வடிய, மனந் துடிக்க மத்தியைத் தூக்கித் தலையை மடியில் வைத்துக்கொண்டு முகத்தில் நீரைத் தெளித்தார். உடம்பைத் தடவினார். சற்றுநேரம் கழித்து மத்தி, உணர்வு பெற்றுக் கண்ணைத் திறந்தாள். எழுந்து உட்கார்ந்து