உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாள் வீரன்

சீயமங்கலத்துக் குகைக்கோயிலின் வெளிப்புறத்தில், இரண்டு பக்கத்திலும் இரண்டு வீரர்களின் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இச் சிற்பங்களில் இடது பக்கத்துள்ள ஒரு வாள்வீரன் சிற்பத்தைப் படத்தில் காண்க.

இந்த வாள்வீரன் மீசையுள்ள ஆண்பிள்ளை. இடது கையில் கேடயந் தாங்கி வலது கையில் வாள் ஏந்தி எதிரியைத் தாக்குகிறான். கேடயம் பிடித்த இடது கை, வலது புறம் திரும்பியிருக்கிறது. வாள் பிடித்த வலது கை தலைக்கு மேலே உயர்ந்து வாளை ஒங்குகிறது. கால்கள் இருக்கும் நிலை இந்த வீரன் எதிரியின்மேல் பாயும் சுறு சுறுப்பை நன்கு புலப்படுத்துகிறது. அரையில் அணிந்துள்ள ஆடை துடைவரையில் சல்லடம்போல் அமைந்திருக்கிறது. ஆனால், அதிலும் ஒர் அழகு புலனாகிறது. போர்வீரனின் வழக்கப்படி தலைமுடியைத் துணியினால் பொதிந்து கட்டிக் குஞ்சக்கயிற்றினால் பிணித்திருக் கிறான்.

போர்வீரரின் தலைமுடி போர்க்களத்தில் அவிழ்ந்து விட்டால் அவ் வீரனுடன் மற்ற வீரர்கள் போர் செய்யக் கூடாது என்பது பண்டைக்காலத்துத் தமிழ்வீரரின் மரபு. ஆகவே தலைமுடி அவிழாதபடி கட்டியிருக்கிறான். காதில் அணிந்துள்ள கனமான குண்டலம் அசைந்து ஆடுகிறது. கைகளிலும் கால்களிலும் காப்பும் கடகமும் வீரக்கழலும் அணிந்திருக்கிறான். முகத்தில் மீசை நன்கு அமைந்திருக்கிறது. எதிரியின் வாள்வீச்சிலிருந்து கேடயத்தினால் தற்காத்துக்கொண்டு, அதேசமயத்தில் எதிரியை வாளினால் வீசப்பார்க்கிறான். கைகால்களின் நிலை, உடம் பின் சாயல், விழிப்புள்ள பார்வை இவையெல்லாம் வாட் போர்க்காட்சியைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

கி. பி. 7 ஆம் நூற்றாண்டில், மகேந்திரவர்மன் காலத்தில் இருந்த போர்வீரனுடைய போர்க்காட்சியின் சிற்பவுருவம் இது.