உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

103

4. கொற்றவை : வீரத்துக்கும் வெற்றிக்கும் தெய்வம் கொற்றவை. கொற்றம் - வெற்றி, அவ்வை - உயர்ந்தவள். கொற்றவை வணக்கம் தமிழ்நாட்டிலே மிகப் பழைய காலந்தொட்டு நடைபெற்று வந்தது. பல்லவ அரசர்களும் கொற்றவையை வழிபட்டனர். கொற்றவைக்குக் கோயில் அமைத்தும், கொற்றவை உருவத்தைச் சிற்பங்களாக அமைத்தும் சிறப்புச் செய்தார்கள். பல்லவர்காலத்துக் கொற்றவை உருவங்கள் அழகுள்ளவை.

மாமல்லன் நரசிம்மவர் மனுடைய தந்தையான மகேந்திர வர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட கொற்றவைத் திருவுருவங் களுக்கும், மாமல்லன் காலத்துக் கொற்றவைத் திருவுருவங்களுக்கும் சிறிது வேறுபாடுகள் உள்ளன. மகேந்திரவர்மன் காலத்துக் கொற்றவைத் திருவுருவங்களைப்பற்றிய விபரங்களை எனது மகேந்திரவர்மன் என்னும் நூலில் கூறியுள்ளேன். அக் காலத்துச் சிற்ப உருவப் படங்களையும் அந் நூலில் வெளியிட்டுள்ளேன்.

5. திரிமூர்த்தி கொற்றவை : இங்கு மாமல்லன் காலத்துக் கொற்றவை உருவங்களை விளக்குவேன். மாமல்லபுரத்தில் திரிமூர்த்தி குகைக்கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு பாறையில் புடைப்புச்சிற்பமாக அமைக்கப்பட்ட கொற்றவையின் உருவம் ஒன்று உண்டு. இந்த உருவத்தைத் துர்க்கா லஷ்மி என்றுங் கூறுவர். இக் கொற்றவையின் திருவுருவம், எருமைத் தலையின் மேலே நின்ற கோலமாக அமைந்துள்ளது.

தலையில் மகுடம் மிளிர்கிறது. காதுகளில் பத்திர குண்டலங்கள் மின்னுகின்றன. எட்டுக் கைகள் உள்ளன. இரண்டு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளார். இரண்டு கைகள் அபயவரத முத்திரை காட்டுகின்றன. மற்றக் கைகள் கேடயம், வில், அம்பு, மணி முதலிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளன. அரையில் மணிமேகலை அணிந்துள்ளார். காலடியில் இரண்டு வீரர்கள் மண்டியிட்டு அமர்ந்திருக்கின்றனர்.

6. வராகமண்டபக் கொற்றவை : கொற்றவையின் இன்னொரு சிற்ப உருவம், மாமல்லபுரத்து வராகமண்டபத்தின் சுவரில் புடைப்புச் சிற்பமாக இருக்கிறது. இந்தக் கொற்றவை ஒரு பீடத்தின் மேல் நின்றவண்ணமாகக் காட்சியளிக்கிறார். தலையில் மணிமுடி யணிந்து காதுகளில் பொற்குழைகள் மின்ன, வீரமும் வெற்றியும் முகத்தில்