உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இந்தச் சோமஸ்கந்த உருவத்திற்கு வலதுபுறத்திலும் இடது புறத்திலும் நான்முகன் திருமால் திருவுருவங்கள் நிற்பதுபோல் அமைந்திருக்கின்றன. கருவறைக்கு வெளியே நான்கு துவாரபாலகர் உருவங்கள் புடைப்புச் சிற்பமாக உள்ளன. இவை இரண்டு கைகளை யுடையவை. இவற்றில் ஒன்று அரசன் உருவம்போலக் காணப் படுகிறது.

54. சூரியன் : இந்தக் கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் மூன்று பக்கங்களிலும் சிற்ப உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. பக்கத்துக்கு ஐந்தாகப் பதினைந்து உருவங்கள் உள்ளன. வடபுறச் சுவரில் நடுநாயகமாக அமைந்திருப்பது சூரிய மூர்த்தியின் உருவம். நான்கு கைகளுடன் சூரியமூர்த்தி நின்ற வண்ணம் காட்சியளிக்கிறார். தலையைச்சுற்றி வட்டமான ஒளிப்பிழம்பு காணப்படுகிறது. காதுகளில் அணிந்துள்ள தோடுகள் தோள்களின்மேல் தொங்குகின்றன. இனிய முகத்துடன் கையில் பூ பிடித்து நிற்கிறார்.

சூரியனுக்கு வலது புறத்திலும் இடது புறத்திலும் நான்கு உருவங்கள், துவாரபாலகர் முனிவர் உருவம் போன்றவை அமைக்கப் பட்டுள்ளன.

55. சந்திரன் : கருவறையின் தெற்குப் பக்கத்துச் சுவரிலும் ஐந்து உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளன. இதில் நடுநாயகமாக நிற்பது சந்திரன் திருவுருவம். தலையின் இடது பக்கத்தில் அரைவட்டம் காணப்படுகிறது. நான்கு கைகளுடன் காதுகளில் குண்டலம் அணிந்து இருக்கிறார்.

சந்திரனுக்கு இடது புறத்தில் இரண்டும் வலது புறத்தில் இரண்டும் ஆக நான்கு துவாரபாலகர் முனிவர் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கருவறையின் பின்புறச் சுவராகிய கிழக்குப் பக்கத்துச் சுவரில் துவார பாலகர் தெய்வங்களின் உருவங்கள். ஐந்து புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

வராகப்பெருமாள் குகைக்கோயில் சிற்பங்கள்

இக் குகைக்கோயிலில் இரண்டு அரசரின் சிற்ப உருவங்கள் இருக்கின்றன. இக் கோயிலின் வலது பக்கத்துச் சுவரிலும் இடது