உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

155

எட்டு ஜதை தேவர்கள் இதில் காணப்படுகிறார்கள். இந்த எட்டு ஜதை தெய்வ உருவங்களும் எட்டு பூதங்களும் எதைக் குறிக்கின்றன என்றால், சகர சக்கரவர்த்திக்குக் கிடைத்த ஒன்பது நிதிகளில், எட்டு நிதிகளைக் குறிக்கின்றன. (ஒன்பதாவது நிதியைப் பற்றிப் பிறகு விளக்குவேன்.) எட்டு நிதிக்கும் எட்டுத் தலைவராக எட்டுத் தேவர்களும் காவலாக எட்டாயிரம் பூதங்களும் இருந்ததை இந்தச் சிற்பப்பகுதி குறிக்கிறது. இதில், எட்டு நிதிகளின் தலைவர்களான எட்டுத் தேவர்களும் மனைவியரோடு எட்டு ஜோடியாகக் காட்டப்பட்டிருக்கின்றனர். இவர்கள் பெயரும் எட்டு நிதிகளின் பெயரேயாகும். அதாவது, நைசர்ப்பன், பாண்டுகன், பிங்கலன், மகாபத்மன், காலன், மகாகாலன், மானவன், சங்கன் என்னும் எட்டு தெய்வங்களாகும். இவ்வாறு, கலையறிஞர்களாகிய சிற்பிகள், எட்டு தெய்வ உருவங்களையும் எட்டு பூதங்களையும் சிற்பத்தில் சித்தரித்து எட்டு நிதிகளைக் காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு நிதிக்கும் ஆயிரம் பூதம் வீதம் எட்டு நிதிகளுக்கு எட்டாயிரம் பூதம் காவலாக இருந்தன. ஆனால், சிற்பத்தில் எட்டாயிரம் பூதங்களைக் காட்டினால் நன்றாக இருக்குமா? இராது. ஆகையினால், 8 நிதிக்கு 8 பூதங்களை மட்டும் காட்டியிருக்கிறார்கள். இவ்வாறு 8 நிதிகளை 8 பூத உருவத்துடனும் 8 ஜதை தெய்வ உருவத்துடனும் சிற்பிகள் அழகாகக் காட்டி யிருக்கிறார்கள். இப்படியில்லாமல் வேறு எப்படி நிதிகளைக் காட்ட முடியும்? எட்டு நிதிகளின் தலைவர்கள் சிற்பத்தில் ஆகாயத்தில் பறப்பதுபோல ஏன் காட்டப்பட்டனர் என்றால், அவர்கள் மானிடர் அல்லர், மானிடருக்கு மேற்பட்ட தெய்வச் சத்தியுள்ள தேவர்கள் என்பதைக் காட்ட இவ்வாறு சிற்பத்தில் அமைக்கப்பட்டனர். இந்தச் சிற்பத்திலேயே வேறு நான்கு உருவங்கள் காணப்படுகின்றன. இந்த உருவங்கள், ஆகாயத்தில் பறப்பதுபோன்று இல்லாமல் தரையில் நிற்பதுபோன்றும், கையில் சில ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டும் காணப்படுகின்றன. தரையில் நிற்பதுபோல் காணப்படுவதால், இவை மனித உருவங்களாகும். இவை எதனைக் குறிக்கின்றன? சகர சக்கரவர்த்தி கண்டப்பிரபாத மலைக்குச் சென்று நோன்பு நோற்றபோது அவருடன் போயிருந்த மந்திரிகளைக் குறிக்கின்றன. இங்குக் காணப்படுகிற சிங்கம், புலி, மான் முதலிய உருவங்கள் கண்டப்பிரபாத மலையைச் சேர்ந்த காடுகளை நினைவூட்டுகின்றன.