உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

/171

என்பதில் சிறிதும் ஐயமில்லை. முற்காலத்தில் மரத்தினாலே கோயில் கட்டிடங்கள் கட்டப்பட்டன என்பதற்குச் சான்று. பிற்காலத்தில் கல்லினால் அமைக்கப்பட்ட கோயில் கட்டிடங்களிலே, மரத்தைச் செதுக்கி யமைக்கப்பட்டது போன்ற அமைப்புகள் காணப்படுவதுதான்.

மரக்கட்டிடங்கள் வெயிலினாலும் மழையினாலும் தாக்குண்டு விரைவில் பழுதுபட்டு அழிந்துவிடும் தன்மையன முக்கியமாக மேல் பகுதியாகிய கூரை விரைவில் பழுதடைந்தன. ஆகவே, மரக் கூரைகள் பழுது படாதபடி அவற்றின்மேல் செம்புத் தகடுகளை வேய்வது பண்டைக்காலத்து வழக்கம். செம்புத் தகடு வேய்ந்த கூரை விரைவில் பழுதடையாது. முற்காலத்தில், சிதம்பரம் முதலிய கோயில்களின் கூரைகளில் சில அரசர்கள் செம்புத் தகடுகளையும் பொற்றகடுகளையும் வேய்ந்தார்கள் என்று கூறப்படுகின்றனர். அக்காலத்தில் மரத்தினால் கட்டிடம் அமைக்கப்பட்டிருந்த படியினால், அவை விரைவில் பழுதாகாதபடி செம்புத் தகடுகளையும் பொற்ற கடுகளையும் அரசர்கள் கூரையாக வேய்ந்தார்கள்.

செங்கல் கட்டிடங்கள்

மரக் கட்டிடம் விரைவில் பழுதடைவதோடு எளிதில் தீப்பிடித்துக் கொள்ளும். ஆகவே, பிற்காலத்தில், செங்கல்லினாலும் சுண்ணாம்பினாலும் கோயில்களைக் கட்டத் தொடங்கினார்கள். செங்கற் கோயில்கள், மரக் கோயில்களைவிட உறுதியாகவும் நெடுநாள் நீடித்திருக்கக் கூடியனவுமாக இருந்தன. இவைகளும் சில நூற்றாண்டு வரையில்தான் நீடித்திருந்தன செங்கற் கட்டிடங்கள் ஏறக்குறைய 200 அல்லது 300 ஆண்டுகளுக்குமேல் நிலைபெறுவ தில்லை. கி.பி. 600- க்கு முற்பட்ட காலத்திலே இருந்த நமது நாட்டுக் கோயில் கட்டிடங்கள் எல்லாம் செங்கல் கட்டிடங்களே.

சங்க காலத்திலே கட்டப்பட்ட கோயில்கள், செங்கல் கட்டிடங் களையும் மர விட்டங்களையும் கொண்டு அமைக்கப்பட்டு, சுவர்மேல் சுண்ணம் பூசப் பெற்றிருந்தன. இத்தகைய செங்கல் கட்டிடக் கோயில்கள் அவ்வப்போது செப்பனிடாமற் போனால் அவை சிதைந்து அழிந்துவிடும். கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் சங்கப் புலவர், இடிந்து சிதைந்துபோன செங்கற் கட்டிடக் கோயில் ஒன்றைக் கூறுகிறார். அச் செய்யுள் பகுதி இது: