உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

19

அமைக்கப்பட்ட கல்கட்டிடங்களில் (கற்றளிகளில்) ஒன்று, மகாபலிபுரம் என்று வழங்கப்படுகிற மாமல்லபுரத்துக் கடற்கரை ஓரத்தில் இருக்கிற கோயில் ஆகும். இக் கோயில் ஏறக்குறைய 1300 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதை அமைத்தவன் இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மன். இவன் கி.பி. 695 முதல் 722 வரையில் அரசாண்டான். காஞ்சீபுரத்துக் கயிலாசநாதர் கோயிலைக் கட்டியவனும் இவனே.

மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில்

இவன் கட்டிய மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில், கடல் நீருக்கு அருகில் இருப்பதால், இக்கட்டிடத்து உள்புறத்திலும் மேல் புறத்திலும் ஈரமான உப்பங்காற்று இரவும் பகலும் வீசிக் கொண்டேயிருக்கிறது. இதன் காரணமாக இக்கட்டிடத்தின் கருங்கற்கள் உளுத்துப் போய்விட்டதை இன்று காண்கிறோம். ஏன்? சில ஆண்டுகளுக்கு முன்பு, கடல் அலைகள் இக்கட்டிடத்தின் படிகளின் மேல் மோதிக் கொண்டிருந்தபோது, இக்கட்டிடம் சிறிது காலத்திற் குள்ளாக கடல் நீரினால் அழிந்துவிடும் என்று அஞ்சினோம். நற்காலமாக அரசாங்கத்துப் பழம்பொருள் ஆராய்ச்சித் துறையினர் (ஆர்க்கியாஜி இலாகா), இக் கோயிலில் கடல் அலைகள் மோதாதபடி கற்சுவர் அமைத்து அரண் செய்திருக்கிறார்கள். இதனால், இக் கோயிலுக்குக் கடல் நீரினால் ஏற்படவிருந்த ஆபத்து நீங்கிவிட்டது. ஆனால், தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தாவிட்டால், கடலில் இருந்து வீசுகிற நமிர்ப்பான உப்பங் காற்றினால் கற்கள் உளுத்து உதிர்ந்து பிறகு கட்டிடமே மறைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.

பல்லவர், சோழர் காலத்துக் கோயில்கள்

எல்லாக் கட்டிடங்களும் பழம் பொருள் பாதுகாப்பாளரின் மேற் பார்வையில் இல்லை. ஆகவே, பெரும்பான்மையான கட்டிடங்கள் சிதைந்து அழிந்து கொண்டிருக்கின்றன. கடற்கரையிலுள்ள கற்றளிகள்தான் அழிந்து விடுகின்றன என்று கருத வேண்டாம். உள் நாட்டிலுள்ள கற்றளிகளும் அழிந்து விடுகின்றன. எடுத்துக் காட்டாக உள்நாடாகிய காஞ்சீபுரத்து அயிராவதேசுவரர் கோயில், மதங்கேசுவரர் கோயில் இறவாஸ்தானக்கோயில் முதலியவைகளாகும். இக்கோயில் களை எல்லாம் அரசாங்கத்தார், அழியவிடாமல் தக்க முறையில்