உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

திருமால் கோயில்களில், ஆண்டாள் சந்நிதி என்று ஒரு கோயில் உண்டு. ஆண்டாள் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர். ஆனால், இவருக்கு மட்டும் சிறப்பாக ஒவ்வொரு பெருமாள் கோயிலும் தனியே ஆலயம் உண்டு. விஜயநகரத்து அரசனான கிருஷ்ண தேவராயன், மிகுந்த வைணவப் பற்றும் ஆண்டாள் பக்தியும் உடையவனாதலின், அவன் வைணவக் கோயில்களில் ஆண்டாள் சந்நிதியைப் புதிதாக அமைத்தான். அவன் காலத்திலும் அதற்குப் பிறகும் ஏற்பட்டவையே ஆண்டாள் சந்நிதிகள்.

இதுவே கோயில் கட்டிடங்களின் வரலாறு. மூலக் கோயிலைச் சூழ்ந்து மண்டபங்கள் அமைக்கப்பட்டபடியால் மூலக் கோயிலை அடிமுதல் முடிவரையில் ஒரே சமயத்தில் பார்த்து மகிழ முடியாமலிருப்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். கோயிலுக்கு வெளியே சற்றுத் தூரத்தில் சென்று மூலக் கோயிலின் சுவர் சிற்ப அமைப்பைப் பார்த்து மகிழ வேண்டியிருக்கிறது. இரண்டையும் ஒருமிக்க பார்த்தால்தான் அக்கட்டிடக் கலையின் அழகை நன்கு உணரலாம். மேற்பகுதி அடிப்பகுதி இரண்டையும் ஒருமிக்கப் பார்த்து மகிழும் வாய்ப்பு வெகு சில கோயில்களிலேதான் அமைந்துள்ளது. ஆனால், பல்லவர் காலத்துக் கோயில்களில் இந்த அழகை முழுவதும்

காணலாம்.

சிற்பாசாரியர்

கோயில் கட்டிடங்களையும் சிற்பங்களையும் அமைத்த சிற்பாசாரியர்களின் பெயர்கள் தெரியவில்லை. அவர்கள் பெயர் மறைந்துவிட்டன். ஆயினும் சில பெயர்கள்மட்டும் தெரிகின்றன.

மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரத்துக் கோயில்களையும் பாறைக் கோயில்களையும் அமைத்த சிற்பாசாரியர்களின் பெயர்கள் சில. மகாபலிபுரத்துக்கடுத்த பூஞ்சேரிக் கிராமத்துக்கு அருகில், நொண்டி வீரப்பன் குதிரைத் தொட்டி என்னும் ஒரு பாறையில் பொறிக்கப்பட்டுள்ளன.18 இப்பெயர்கள் மாமல்லபுரத்துச் சிற்பங்களை அமைத்த சிற்பாசாரிகளின் பெயர்கள் என்று கருதப்படுகின்றன.

அவை:-

1. கேவாத பெருந்தச்சன், 2. குணமல்லன். 3. பய்யமிழிப்பான். 4. சாதமுக்கியன். 5. கலியாணி. 6. திருவொற்றியூர் அபாஜர். 7. கொல்லன் ஸேமகன்.