உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகைக்கோயில்கள்*

இப்போது தமிழ்நாட்டில் ஏறக்குறைய ஐம்பதுக்கு மேற்பட்ட குகைக் கோயில்கள் உள்ளன. முதன் முதலாகத் தமிழ்நாட்டிலே குகைக்கோயில்களை அமைத்தவன் மகேந்திரவர்மனே. இவனுக்குப் பிறகு இவன் சந்ததியார் சில குகைக்கோயில்களை அமைத்தார்கள். பிறகு பாண்டியன் முதலிய வேறு அரசர்களும் சில குகைக்கோயில் களை அமைத்தார்கள்.

மகேந்திர வர்மன் காலத்துக் குகைக்கோயிலுக்கும் மற்றவர் காலத்துக் குகைக்கோயிலுக்கும் சில வேறுபாடுகள் காணப்படு கின்றன. இந்த வேறுபாடுகளைக் கொண்டு மகேந்திர வர்மன் அமைத்த குகைக்கோயில்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். முன்னே மண்டபமும், மண்டபத்தில் மத்திய பாகத்தில் கர்ப்பக் கிருகமும் அமைக்கப்படுவது எல்லாக் குகைக்கோயிலின் பொதுத் தன்மையாக இருந்தபோதிலும், மண்டபத் தூண்களின் அமைப்பு, துவாரபாலகரின் அமைப்பு, மகர தோரண அமைப்பு, முதலிய வற்றைக் கொண்டு இந்தக் கோயில்கள் எந்தெந்தக் காலத்தில் அமைக்கப்பட்டன என்பதை அறிந்து கொள்ளலாம்.

கீழ்க்கண்ட அடையாளங்களைக் கொண்டு மகேந்திர வர்மன் காலத்துக் குகைக்கோயில்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று ஆராய்ந்தறிந்த அறிஞர்கள் கூறுகிறார்கள்.

தூண்கள்:- குகைக்கோயிலின் மண்டபத்தைத் தாங்கியுள்ள தூண்கள், மேற்பகுதி நடுப்பகுதி அடிப்பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மேற்பகுதியும் அடிப்பகுதியும் நான்கு பக்கமுள்ள சதுரமாகவும் நடுப்பகுதி எட்டுப்பட்டையாகவும் இருக்கும். சில குகைகளில் இத் தூண்களின் சதுரப்பகுதியில் தாமரைப்பூவின் சிற்பம் பொறித்திருக்கும்.

  • மகேந்திரவர்மன் (1955) என்ற நூலில் இடம்பெற்ற கட்டுரை.