உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

89

திருச்சிக் குகைக்கோயிலிலே, புடைப்புச் சிற்பமாக அமைக்கப் பட்டுள்ள கங்காதர மூர்த்தியின் அமைப்பை விளக்குவோம்.'

இந்தச் சிற்பத்தில் நடுநாயகமாக விளங்குபவர் சிவபெருமான். குறள் உருவமுள்ள ஒரு பூதகணத்தின்மேல் தமது வலது காலை வைத்து இடது காலைத் தரையில் ஊன்றி நிற்கிறார். அவருடைய இடது கை இடுப்பில் ஊன்றி நிற்கிறது. வலது கையில் ஒரு பாம்பைப் பிடித்திருக்கிறார். அப்பாம்பு படமெடுத்து ஆடுகிறது. மற்றொரு வலது கையைத் தூக்கி விரல்களினாலே தமது சடாமுடியின் ஒரு புரியை அவிழ்த்துப் பிடித்திருக்கிறார். அந்தப் புரிசடையிலே ஆகாய கங்கை, ஒரு மகள் உருவமாக மேலிருந்து வந்து அமர்கிறாள். அவளுடைய செருக்கும் வேகமும் அடங்கி விட்டன. மற்றோர் இடது கையில் சிவபெருமான் எதையோ ஒரு பொருளை வைத்திருக்கிறார். இந்த இடது கைக்கு மேலே, கங்கைக்கு எதிர்ப்புறத்தில், ஓர் எலி காணப்படுகிறது. இது ஏன் இங்குக் காணப்படுகிறது? இதன் கருத்து

யாது?

சிவபெருமானுடைய காலடியில் இருபுறத்திலும் இரண்டிரண்டு பேர் தரையில் மண்டியிட்டு அமர்ந்து கையைத் தூக்கிச் சிவ பெருமானைக் காட்டியவண்ணம் அவரைத் துதிசெய்கிறார்கள். அதுபோலவே வேறு இரண்டுபேர், சிவபெருமானுக்கு இரு புறத்திலும் ஆகாயத்தில் பறந்தபடி தமது கையை உயர்த்தி அவரைப் போற்றுகிறார்கள். இவர்கள் தேவர்கள் போலும்.

வெள்ளப்பெருக்குடன் உலகத்தை யழிக்க வேகமாக வந்த கங்கையின் ஆற்றலை அடக்கி, உலகத்தை அழிக்க விடாமல் தமது சடையின் ஒரு சிறு புரியில் ஏற்றுக் கொண்ட சிவபெருமானை மனிதரும் தேவரும் புகழ்ந்து போற்றி வணங்குவதை இந்தச் சிற்பம் விளக்குகிறது.

சிவபெருமான் வலது காலைப் பூதகணத்தின்மேல் வைத்து இடது கையை இடுப்பிலேயூன்றி உடம்பைச் சற்றுச் சாய்த்து நிற்கும் எழிலும், தமது சடாமுடியிலிருந்து ஒரு புரியை மட்டும் எடுத்து அதை விரல்களால் பிடித்துக் கங்கையைத் தாங்கும் எளிமையும், ஆற்றலும் செருக்கும் அடங்கிய கங்கையின் அமைதியும், தரையில் அமர்ந்தும் வானத்தில் இருந்தும் மக்களும் தேவரும் கடவுளை வாழ்த்தும் உருக்கமும் இந்தச் சிற்பத்தைக் காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.