உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

பாம்படம் தவிர ஓலை என்னும் அணியையும் காதில் அணிந்தனர். பனை ஓலையைச் சுருட்டி அணிவதனால் ஓலை என்று பெயர் பெற்றது. செல்வர்கள் ஓலையைப் பொன்னால் செய்து அணிந்தார்கள். வயிரக் கற்கள் அழுத்திச் செய்யப்பட்ட வயிர ஓலைக்குச் 'சந்திரபாணி' என்னும் பெயர் வழங்கியது. கம்மல், வயிரத்தோடு முதலியவைகளும் பிற்காலத்தில் உருவாயின.

காதிலே அணியப்பட்ட மற்றொரு நகை குதம்பை என்பது. பருத்த நீலமணியுடன் வைரக்கற்களைப் பதித்துச் செய்யப்படுவது இது. கர்ணப்பூ என்றும், செவிப்பூ என்றும் பெயருள்ள இன்னொரு வகையான காதணியையும் அக்காலத்துப் பெண்கள் அணிந்தனர்.

இனி, பெண்மணிகள் தலைக்கு அணிந்த அணிகலன்களைப் பார்ப்போம். சீதேவியார், வலம்புரி, தென்பல்லி, வடபல்லி என்னும் நகைகள் தலையில் அணியப்பட்டன. சீதேவியார் என்பது சூளாமணி. இதற்கு இரத்தினச் சுட்டி, ஜடைப்பில்லை என்றும் பெயர் உண்டு. தென்பல்லி, வடபல்லி என்பவை, பல்லியின் உருவமாகச் செய்யப்பட்ட நகைகள். இவை தலையில் இடதுபுறத்திலும் வலதுபுறத்திலும் அணியப்பட்டன. தொய்யகம், வாகுசுட்டி என்னும் நகைகள் நவரத்தினங்களால் செய்யப்பட்டவை. இவை தலையின் நடுவில் மயிரின் பிரிவில் அணியப்பட்டன.

மூக்குக்கு அணிந்த மூக்குத்தி, புல்லாக்கு என்னும் நகைகளைப் பற்றிப் பழைய நூல்களில் காணப்படவில்லை. இந்த நகைகள் அணிவது பிற்காலத்திலே வடநாட்டவர் தொடர்பினால் ஏற்பட்ட வழக்கம்.

பெண்மணிகள் கழுத்துக்கும் பலவகையான அணிகளை அணிந்தார்கள். அவற்றில், வீரசங்கிலி என்பது சங்கிலிபோலப் பொன்னால் செய்யப்பட்டது. சரடு அல்லது ஞாண் என்பது கயிறு போலப் பொன்னால் செய்யப்பட்டது. பொன்னரி மாலை என்பது பொன்னாலும் இரத்தினங்களாலும் செய்யப்பட்ட அழகான ஆபரணம். முத்துமாலை, பவழமாலைகளும் கழுத்துக்கு அணியப்பட்டன. காசுமாலை என்பது பிற்காலத்தில் உண்டானது. இது பொற்காசு களையும் பவுன்களையும் சேர்த்து அமைக்கப்பட்டது. அட்டிகை என்னும் நகையும் கழுத்துக்கு அணியப்பட்டது. இது இரத்தினம், வைரம், முத்து முதலியவை பதிக்கப்பட்ட அணி. இதுவும் பிற்காலத்தில் தோன்றிய நகையாகும்.