உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

பாடகம் என்னும் காலணி, சிலம்புக்கு மேலே அணியப் பட்டது. இதுவும் இப்போது வழக்கிழந்து விட்டது. சதங்கை என்பதும் காலுக்கு அணியும் ஆபரணம். சலங்கை என்றும் கிண்கிணி என்றும் இதற்குப் பெயர் உண்டு.

குறங்கு செறி என்பது பெண்கள் காலுக்கு மேலே தொடையில் அணிந்துகொண்ட ஆபரணம். இக்காலத்தில் இது வழக்கத்தில் இல்லை. கடகம் என்பது மேல்கையில் அணிவது. இது மாணிக்கம் முதலிய கற்கள் பதித்துப் பொன்னால் செய்யப்படுவது. இதனை ஆடவரும் அணிந்தனர்.

கைவிரல்களுக்கும்

கால்விரல்களுக்கும்

மோதிரங்கள்

அணியப் பட்டன. காலாழி, கால் பெருவிரலில் அணியப்பட்டது. மகரவாய் மோதிரம் என்பது கால் நடுவிரவில் அணியப்பட்டது. பீலி என்பதும் கால்விரலில் அணியப்பட்ட மோதிரம்.

கையில் சுண்டுவிரலுக்கு அடுத்த விரலில் அணியப்பட்ட மோதிரத்துக்குப் பகுவாய் மோதிரம் என்பது பெயர். மகரமீன் (வாளைமீன்) வாய் திறந்து அங்காந்திருப்பது போலச் செய்யப் பட்டிருக்கும். இதற்கு நெளி என்றும் பெயர் உண்டு. மணிமோதிரம் என்பது நடுவிரலில் அணியப்படுவது. இதில் மாணிக்கக் கல் பதித்திருக்கும். ஆள்காட்டி விரல் என்னும் சுட்டுவிரலில் அணியப் படுவது மரகத மோதிரம்; இதற்கு மரகத மோதிரம், வட்டப்பூ என்றும் பெயர் உண்டு. இதன் நடுவில் பெரிய மரகதக் கல்லும் (பச்சைக் கல்), அதைச் சுற்றிலும் சிறு வைரக் கற்களும் பதித்திருக்கும். இக்காலத்தில் வெவ்வேறு வகையான மோதிரங்கள் கைவிரல்களில் அணியப் படுகின்றன.

ஏனாதி மோதிரம் என்னும் ஒருவகை மோதிரம் பண்டைக் காலத்தில் இருந்தது. ஏனாதி மோதிரத்தை எல்லோரும் அணிய முடியாது. சேனைத்தலைவர்களில் ‘ஏனாதி' என்னும் பட்டம் பெற்றவர்கள்மாத்திரம் இந்த மோதிரத்தை அணிந்தார்கள். சேர சோழ பாண்டிய அரசர்கள் தமது சேனைத் தலைவரைப் பாராட்டி ஏனாதிப் பட்டம் அளிக்கும்போது, 'ஏனாதி மோதிரத்தை’ அவர்கள் கைவிரலில் அணிவிப்பார்கள். ஆகவே, ஏனாதி மோதிரம் சேனைத்தலைவருக்கு மட்டுந்தான் உரியதாக இருந்தது.