உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

"இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி

வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர் ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும் குலவு மணல் நெடுங்கோட் டாங்கண் உவக்காண் தோன்றுமெஞ் சிறுநல்லூரே'

(அகம் 350)

உலகப்புகழ் பெற்ற பாண்டிநாட்டு முத்துக்களைத் தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் புகழ்ந்து பேசுகின்றன.

ரோமாபுரியிலிருந்தும் எகிப்து தேசத்திலிருந்தும் வாணிகத்தின் பொருட்டுக் கப்பலில் வந்த யவன மாலுமிகள், மரக்கலங்களில் பொன்னைக் கொண்டுவந்து தமிழ்நாட்டிலிருந்து முக்கியமாக மூன்று பொருள்களை வாங்கிக்கொண்டு போனார்கள். அவர்கள் வாங்கிக் கொண்டுபோன மூன்று பொருள்கள் சேரநாட்டு மிளகும் கொங்குநாட்டு நீலக் கற்களும் பாண்டிநாட்டு முத்துக்களுமாம். யவன மாலுமிகள், அக் காலத்தில் தமிழ்நாடாக இருந்த சேர நாட்டு முசிரித் துறைமுகத்துக்கு வந்து மரக்கலங்களில் தங்கினார்கள். தங்கி, மிளகை வாங்கி மரக்கலங்களில் நிரப்பிக்கொண்டு, பிறகு வட கொங்குநாட்டில் அக்காலத்தில் பேர் பெற்றிருந்த புன்னாட்டுக்கு வந்து, அங்குக் கிடைத்த நீலக்கற்களை வாங்கினார்கள். அக்காலத்தில் உலகத்தி லேயே வேறெங்கும் கிடைக்காத புன்னாட்டுச் சுரங்கங்களில் கிடைத்த நீலக்கற்களை வாங்கினார்கள். அக்காலத்திலே கொங்குநாட்டு ஊர்களில் (படியூர் முதலான ஊர்கள்) மணிக்கற்கள் கிடைத்தன. அம்மணிக்கற்களில் அக்காலத்தில் உலகப் புகழ் பெற்றிருந்தது நீலக்கற்கள். நீலக்கற்களை வாங்கிக் கொண்ட பிறகு, யவன வாணிகர், தரைவழியாக அக்காலத்துக் கொங்கு நாட்டின் தலைநகரமாக இருந்த கருவூருக்கு வந்தார்கள். பிறகு, கருவூரிலிருந்து தரை வழியாகவே பாண்டிநாட்டுக்கு வந்து, பாண்டிநாட்டு முத்துக்களை வாங்கிக்கொண்டு போனார்கள். அக்காலத்தில் யவனர்கள் கொண்டுவந்த செம்பு, வெள்ளி, பொன் நாணயப் புதையல்கள் (ரோமாபுரிக் காசுகள்) அண்மைக் காலத்தில் கரூர்ப்பக்கங்களிலும் மதுரை நகரப்பக்கங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இந்தப் பழங்காசுப் புதையல்கள், அந்தக்காலத்தில் கிரேக்கரும் ரோமரும் தமிழகத்துடன் வாணிகம் செய்ததற்குச் சான்று பகர்கின்றன.