உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

167

சேரநாட்டிலே உண்டான முத்துக்குக் கௌர்ணேயம் என்று ஏன் பெயர் வந்தது? இது பற்றி ஒருவரும் ஆராய்ச்சி செய்யவில்லை. கௌர்ணேயம் என்பது சௌர்ணேயம் சொல்லின் திரிபு என்று தெரிகிறது. சௌர்ணேயம் என்றால், சூர்ணியாற்றில் தோன்றியது என்பது பொருள். சூர்ணியாறு (பெரியாறு) கடலில் கலக்கிற இடத்தில் உண்டானபடியினால், அந்த முத்துகளுக்குச் சூர்ணேயம் என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம். வடமொழி இலக்கணப்படி, சூர்ணேயம் சௌர்ணேயம் ஆயிற்று; பிறகு சகரம் ககரமாக மாறிற்று. சேரம் கேரம் என்றும், செவி (தமிழ்) கிவி (கன்னடம்) என்றும் ஆனதுபோல, தாமிரபரணி ஆறு, கடலில் கலக்கிற புகர் முகத்தில் கடலில் உண்டாகிற முத்துக்குத் தாம்ரபர்ணிகம் என்று பெயர் ஏற்பட்டதுபோல, சூர்ணி ஆறு கடலில் கலக்கிற புகர்முகத்தில் உண்டான முத்துக்குச் சௌர்ணேயம் என்று பெயர் உண்டாயிற்று என்று கருதலாம். பிறகு சௌர்ணேயம் கௌர்ணேயமாயிற்று.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்தவராகக் கருதப்படுகிற கௌடல்லியர் தமது அர்த்தசாஸ்திரத்திலே, சேரநாட்டில் முத்து உண்டானதைக் கூறியுள்ளார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்தவராகக் கருதப்படுகிற கபிலரும், அரிசில் கிழாரும் சேரநாட்டில் பந்தர் என்னும் பட்டினத்தில் முத்துக் குளிக்கும் இடம் இருந்ததைப் பதிற்றுப் பத்தில் கூறியுள்ளனர். இவற்றிலிருந்து, இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சேரநாட்டில் முத்துச்சலாபம் இருந்த செய்தி தெரிகிறது.

சேரநாட்டின் தலைநகரமாயிருந்த வஞ்சி மாநகரமும் (இதற்குக் கருவூர் என்றும், கருவூர்ப்பட்டணம் என்றும் வேறு பெயர்கள் உண்டு. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இப்போது இருக்கின்ற கருவூர் (கரூர்) அன்று கருவூர்ப்பட்டினமாகிய வஞ்சி மாநகரம்) சேரநாட்டின் துறைமுகப்பட்டினமாக இருந்த முசிறியும், கொடுமணம், பந்தர் என்னும் ஊர்களும் அடுத்தடுத்துக் கடற்கரை ஓரமாக இருந்தன. கொடுமணம், பந்தர் என்னும் ஊர்கள் வஞ்சிமா நகரத்துடன் இணைந்திருந்த ஊர்கள் என்று தெரிகின்றன. இந்தப் பட்டினங்களும் ஊர்களும் பிற்காலத்தில் மறைந்துவிட்டன. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, கி.பி.1341-இல் பெய்த பெருமழையினாலே, பெரியாறு வெள்ளம் தாங்கமாட்டாமல் கரைவழிந்தோடிப் பல இடங்களை அழித்துவிட்டது.