உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகக் கலை*

நாடகம் என்பது நடிப்பு. ஒருவர் செய்வது போலவும் பேசுவதுபோலவும் நடித்தல் நாடகம் எனப்படும் 'நாடகம் கதை தழுவிவரும் கூத்து' என்று கூறினார் அடியார்க்கு நல்லார். அகப்பொருள் (காதல்) வாழ்க்கையைக் கூறுகிற இடத்தில் 'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்' என்னும் தொல்காப்பியச் சூத்திர (பொருள் அகத்திணையியல்) உரையில் இளம்பூரண அடிகள் நாடகம் என்பதற்கு விளக்கங் கூறுகிறார்: “நாடக வழக்காவது சுவை (ரசம், மெய்ப்பாடு) வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல்." இவ்வாறு விளக்கங் கூறினவர் அகப்பொருள் (காதல்) நாடகங்களைப் பற்றிக் கூறுகிறார்: "அஃதாவது செல்வத்தானும் குலத்தானும் ஒழுக்கத்தானும் அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டாரெனவும், அவ்வழிக் கொடுப்போருமின்றி அடுப்போருமின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தாரெனவும், பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும் பிறவும் இந்நிகரனவாகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு கூறுதல்." அகப்பொருள் நாடகத்தைப் பற்றி இவர் கூறியது மற்ற நாடகங்களுக்கும் பொருந்தும்.

நாடகத்தை நடிக்கும்போது, அதைக் கண்ணால் கண்டும் காதால் கேட்டும் மகிழ்கிறோம். நாடகங்கள் இரண்டு வகைப்படும். அவை, நடிக்கும் நாடகம், படிக்கும் நாடகம் என்பவை. நடிக்கும் நாடகம் என்பது நடிகர் நடிப்பதைக் கண்டு மகிழ்வது; படிக்கும் நாடகம் என்பது நாடக நூலைப் படித்து மனத்தினால் உணர்வது. இக்காலத்தில் வானொலியிலே ‘கேட்கும்' நாடகம் நடிக்கப்படுகிறது. வானொலி நாடகத்தில் நடிகர்களைக் காணமுடியாது. அவர்களைக் காணாமலே அவர்களுடைய பேச்சையும் பாட்டையும் கேட்டு மகிழ்கிறோம்.

தமிழர் வளர்த்த முத்தமிழில் நாடகத்தமிழும் ஒன்று. நாடகத்தமிழில் கூத்து, நடனம், நாடகம் என்பவை அடங்கும். கூத்து நடனம் நாடகங்களை ஆடவும் நடிக்கவும் பாணர் என்னும் இனத்தார் தமிழ்நாட்டில் இருந்தார்கள். அவர்கள் இந்தக் கலைகளை வளர்த் * நுண்கலைகள் (1967) நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை.