உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

கூறியிருப்பார்கள். அவ்வாறு கூறாதபடியினாலே, பொதுமக்கள் படிப்பதற்கென்று அக்காலத்தில் நாடக நூல்கள் எழுதப்படவில்லை என்பதும், பொது மக்கள் நாடகத்தை மட்டும் கண்டு மகிழ்ந்தனர் என்பதும், நாடகம் நடிப்போர் தாங்கள் நடிக்கும் நாடகங்களின் அமைப்பை மட்டும் அவ்வப்போது எழுதிப் பயின்று வந்தனர் என்பதும் தெரிகின்றன. கூத்தராகிய நடிகர்களின் உதவிக்காக, அவர்கள் நாடகத்தை எப்படியெல்லாம் அமைக்கவேண்டும் என்னும் முறைகளை அமைத்து நாடக இலக்கண நூல்கள் அக்காலத்தில் எழுதப்பட்டிருந்தன. அப்படி இயற்றப்பட்ட நாடக இலக்கணச் சூத்திரங்கள் இப்போதும் நமக்குப் போதிய அளவு கிடைத்துள்ளன. இந்த நாடக இலக்கணத்தைப் பின்பற்றிப் பண்டைக்காலத்து நடி கர்கள் கதைகளை நாடகமாக அமைத்துக் கொண்டதுபோல, நாமும் இப்போது சிறந்த நாடக நூல்களை அமைத்துக்கொள்ளலாம். அவ்வளவுக்குப் போதுமான நாடக இலக்கணச் சூத்திரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

நாடக இலக்கண நூல்கள் முழு நூலாக நமக்குக் கிடைக்க வில்லை. அந்நூல் சூத்திரங்கள் சிலவற்றை உரையாசிரியர்கள் தமது உரைகளிலே மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். அன்றியும், தொல்காப்பியப் பொருளதிகாரத்திலே மெய்ப்பாட்டியலில் இதைப் பற்றிச் சில சூத்திரங்களும் காணப்படுகின்றன. இவற்றின் உதவியைக் கொண்டு நமக்கு வேண்டிய கதைகளை நாடகமாக அமைத்துக் கொள்ள முடியும்.

நாடக இலக்கண நூல்கள்

மதிவாணனார் என்பவர் எழுதிய நாடகத் தமிழ் என்னும் நூலும் செயிற்றியனார் என்பவர் இயற்றிய செயிற்றியம் என்னும் நூலும் நாடக இலக்கணங்களைக் கூறுகிற நூல்கள். செயன்முறை என்னும் நூலும் இருந்தது. இந்நூல்கள் கடைச்சங்க காலத்துக்குப் பிறகு (கி.பி. 300க்குப் பிறகு) உண்டானவை. இவை, சங்ககாலத்து நாடகத் தமிழ் நூல்களைப் பின்பற்றி எழுதப்பட்டன. இந்த நூல்களிலிருந்துதான் நாடக இலக்கணச் சூத்திரங்களை உரையாசிரிர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள். இவைகளின் உதவியினாலே நாடகநூல் எழுதவேண்டிய முறைகளையும், நடிகரின் நடிப்பு, அந் நடிப்பில் காட்டவேண்டிய சுவை, குறிப்பு முதலியவைகளைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.