உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -13

காணப்படுகிறது. யானையும், எருதும் எதிர் எதிராக முட்டிக் கொண்டு நிற்கின்றன. யானையின் தலை, தும்பிக்கையுடன் எருதில் தலைமேல் காணப்படுகிறது. யானையின் முகமும் எருதின் முகமும் ஒன்றாக அமைந்து, ஒரே அமைப்பு இரண்டு முகங்களாகத் தோன்றுகின்றது. இது சிற்பக்கலையில் சிலேடையல்லவா? யானையின் முகத்தைப் பார்க்கிறபோது எருதினுடைய முகம் மறைந்து விடுகிறது. எருதினு டைய முகத்தைப் பார்க்கிற போது யானையினுடைய முகம் மறைந்து போகிறது. இந்தக் காட்சி, பார்க்கிறவர்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

நான்குதலை மான்குட்டி

இந்தப் படத்தைப் பாருங்கள். இந்த மான் குட்டிக்கு நான்கு தலைகள் இருப்பதுபோலச் சிற்பத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் இதற்கு ஒரு தலைதான் உண்டு. ஒரு தலையையே நான்கு பார்வையாகச் சிற்பி சிற்பத்தில் அமைத்துக் காட்டியுள்ளார். முதல் அமைப்பில், மான்குட்டி, தன் தலையைத்தாழ்த்தி வயிற்றை நக்குவதுபோலக் காணப்படுகிறது. அதற்கு அடுத்த அமைப்பு குனிந்து கீழே பார்க்கிறதுபோலக் காணப்படுகிறது. மூன்றாவது அமைப்பில், இந்த மான்குட்டி தலையை நிமிர்த்தி நேராகப் பார்ப்பதுபோலக் காணப்படுகிறது. நான்காவதாக இது தலையைப் பின்புறமாகத் திருப்பிப்பார்ப்பது போலக் காணப்படுகிறது. ஒரு தலையைப் பார்க்கும் போது மற்ற மூன்று தலைகளை மறைத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு சிற்பி ஒருவர், கருங்கல்லில் இச்சிற்ப உருவத்தைச் செதுக்கியுள்ளார்.

ஒற்றைத்தலை மான்கள்

இந்தச் சிற்பத்தில் நான்கு மான்கள் காணப்படுகின்றன. நான்கு மான்களுக்கு நான்கு தலைகள் இருக்கவேண்டும் அல்லவா? அதுதான் இல்லை. நான்கு மான்களுக்கும் ஒரே தலை வைத்துச் சிற்பி ‘சிலேடை' செய்கிறார். ஒரே தலையை அமைத்து நான்கு மான்க ளையும் வெவ்வேறு தோற்றமாகக் காட்டுகிறார். இரண்டு மான்கள் தரைமேல் படுத்திருக்கின்றன. வலதுபுறத்து மான், தன் தலையை இடது பக்கமாக திருப்பி தூரத்தில் எதையோ பார்க்கிறது. இடது புறத்தில் படுத்திருக்கிற மான் தன் தலையை உயர்த்தி வலதுபக்கமாக எதையோ பார்க்கிறது. ஆனால் இரண்டுக்கும் தலை ஒன்று தான், வெவ்வேறு தலைகள் இல்லை.