உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் ஓவியம் - அணிகலன்கள் - 41

இசை

இனி, இசையைப் பற்றிச் சில செய்திகளைக் கூறுவோம்.

இசை ஏழு, அவை குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. இவை தமிழ்ப் பெயர்கள் மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம் என்பன வட மொழிப் பெயர்கள்.

இசை பிறக்கும் இடங்களாவன: - மிடற்றினால் குரலும், நாவி னால் துத்தமும், அண்ணத்தால் கைக்கிளையும், சிரத்தால் உழையும், நெற்றியால் இளியும், நெஞ்சினால் விளரியும், மூக்கால் தாரமும் பிறக்கும்.

இவை ஏழ்சுரம் எனவும், வீணையில் ஏழ் நரம்பு எனவும்படும். இசை அல்லது இராகத்தின் தகுதி நான்கு வகைப்படும். அவை 1. இடம், 2. செய்யுள், 3. குணம், 4. காலம் என்பன. இவற்றை விளக்குவாம்.

1. இடம். இடம்பற்றிய இராகம் ஐந்திணை இராகம். அவை: குறிஞ்சி பாலை முல்லை நெய்தல் மருதம் என்னும் ஐந்துவகை நிலத்திற்குரிய குறிஞ்சி பாலை சாதாரி செவ்வழி மருதம் என்பவை.

2. செய்யுள். செய்யுளைப் பற்றிய இராகம்:-

வெண்பாவின் இராகம் சங்கராபரணம். அகவற்பா அல்லது ஆசிரியப்பாவின் இராகம் தோடி. கலிப்பாவின் இராகம் பந்துவராளி. கலித்துறையின் இராகம் பைரவி. தாழிசையின் இராகம் தோடி. விருத்தப்பாவின் இராகம் கலியாணி, காம்போதி, மத்தியமாவதி முதலியன. உலாச் செய்யுளின் இராகம் சௌராஷ்டிரம், பிள்ளைத் தமிழின் இராகம் கேதாரகவுளம், பரணியின் இராகம் கண்டாரவம்.

3. குணம். குணம்பற்றிய இராகங்கள், இரக்கம் உள்ளவை: ஆகரி, கண்டாரவம், நீலாம்பரி, பியாகடம், புன்னாகவராளி. துக்கம் உள்ளவை: மேற்கூறிய இரக்க ராகங்களும் வராளி இராகமும். மகிழ்ச்சியுள்ளவை: காம்போதி. சாவேரி, தன்யாசி, யுத்த இராகம்: நாட்டை.

4. காலம். காலம்பற்றிய இராகங்கள்: வசந்த கால இராகம், காம்போதி அசாவேரி தன்னியாசி.

மாலை வேளை இராகம்: கலியாணி, காபி, கன்னடம், காம்போதி.