உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழல் – வங்கியம்

குழலுக்கு வங்கியம் என்றும் பெயர் உண்டு. குழல் மிகப் பழமையான இசைக்கருவி. இதற்குப் புல்லாங்குழல் என்றும் வேணு என்றும் பெயர் உண்டு. புல் என்றாலும் வேணு என்றாலும் மூங்கில் என்பது பொருள். ஆதிகாலத்தில் மூங்கிற் குழாயினால் செய்யப்பட்ட கருவி யாகையால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. புல்லாங்குழல் எப்படி இசைக்கருவியாயிற்று? காட்டில் வளர்ந்த மூங்கிற் புதர்களில் சில மூங்கிற் குழாய்களை வண்டுகள் துளைத்துத் துளைகளை உண்டாக்கின. வேகமாகக் காற்றடிக்கும்போது அந்தத் துளைகளின் வழியாகக் காற்று உள்ளே புகுந்து விசையோடு வெளிப்பட்டபோது, அந்தக் குழாயிலிருந்து இனிமையான ஓசையுண்டாயிற்று. அதைக்கேட்டு வியப்படைந்த அக்காலத்து மனிதன், அந்த மூங்கிற் குழாயை ஆராய்ந்து பார்த்து, அக்குழாயில் துளைகள் இருப்பதை யறிந்து அதைப்போலவே குழலையுண்டாக்கி, வாயினால் ஊதி இசைக்கருவியாக்கினான். பிறகு அதை மேன்மேலும் சீர்திருத்தி முழு இசைக்கருவியாக்கிக் கொண்டான். பிற்காலத்தில் வெண்கலக் குழாயினாலும் மரங்களினாலும் புல்லாங்குழலை உண்டாக்கினார்கள். பழைய வில்யாழ் மறைந்துவிட்டது போலப் புல்லாங்குழல் மறைந்துவிடாமல் நிலைபெற்றிருக்கிறது. உலகம் உள்ளளவும் குழல் நிலை பெற்றிருக்கும்.

@

இசைக்கலையை வளர்த்த பழந்தமிழர், இசைகளைப் பற்றியும் சைக்கருவிகளைப்பற்றியும் நூல்களை எழுதினார்கள். அந்த இசைக்கருவிகளில் ஒன்றான வங்கியத்தைப் பற்றியும் நூல் எழுதினார்கள். அவர்கள் இது பற்றி எழுதியுள்ளதைக் கூறுவோம்.

குழலாகிய வங்கியத்தை வாசித்த இசைக் கலைஞன் குழலோன்

என்றும் வங்கியத்தான் என்றும் பெயர் பெற்றான்.

  • நுண்கலைகள் (1967) நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.