உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்புரம் எரித்த முதல்வன்*

மாமல்லபுரம், தமிழர்களின் சிற்பக் கலைக்கு ஒரு பெருஞ் சிறப்பிடம். அங்கே எத்தனையோ பல, அழகிய வியத்தகு சிற்பங்கள் சிறப்புற அமைந்துள்ளன. எழில் கனிந்த அச் சிற்பங்களுள் ஒன்றின் படத்தினை, யான் அண்மையிற் காண நேர்ந்தது. அதனைப் பேராசிரியர் திரு. பண்டித இராம. மீனாட்சிசுந்தரம் பிள்ளை எம்.ஏ. அவர்கள், எனக்கு அனுப்பி வைத்ததுடன், அதற்குரிய விளக்கத் தினைத் தருமாறும் கேட்டிருந்தார்கள்.

இந்தச் சிற்பத்தின் படத்தைக் கண்ட போது, நான் பெரிதும் வியப்பு அடைந்தேன். சிவபெருமானுடைய விரட்ட மூர்த்தங்களில் ஒன்றான திரிபுராந்தக மூர்த்தியின் திருவுருவம் அது. திரிபுராந்தக மூர்த்தியின் நின்ற கோலமாக அமைந்த சிற்ப உருவங்களைத் தான் நான் கண்டிருந்தேன். இருந்த கோலமாக அமைந்த திரிபுராந்தக மூர்த்தியின் சிற்ப உருவத்தை இதற்கு முன்பு நான் கண்டது இல்லை. கவே அந்தப் படத்தைக் கண்டு வியப்பு அடைந்தேன்.

இந்தப் படத்தைப் பார்க்கும் போது, சிவபெருமான் தம்முடைய இடது கையில் பிடித்துள்ள நீண்ட வில் முதலில் நம்முடைய கருத்தைக் கவர்கின்றது. உடனே இது கோதண்டராமன் திருவுருவம் என்று நினைக்க தோன்றுகிறது. இவ்வுருவத்தின் மற்றக் கைகளில் காணப்படுகின்ற மற்ற ஆயுதங்களைக் காணும் போது தான் இது கோதண்டராமன் உருவம் அன்று, சிவபெருமானுடைய உருவம் என்பதை உணர்கிறோம்.

உயரமான ஆசனத்தின் மேலே கம்பீரமாகவும் உவகையோடும் அமர்ந்திருக்கிற சிவபெருமான் சடா மகுடத்துடன் நான்கு திருக்கை களுடனும் காட்சியளிக்கிறார். வலது காலை மடக்கி ஆசனத்தின் மேல் படிய வைத்து இடது காலை தொங்க விட்டு சிவபெருமான் சுகாசன *திருக்கோயில் : ஜூலை, 1968.