உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதிரப் பட்டி அல்லது இரத்தக் காணி*

"பரும யானையொடு பாஞ்சால ராயனை வெங்களத் தட்ட வென்றி யிவையென நெய்த்தோர் பட்டிகை யாக வைத்துப்

பத்தூர் கொள்கெனப் பட்டிகை கொடுத்து”

என்பது பெருங்கதை (வத்தவ காண்டம் : கொற்றங் கொண்டது 10-13) நெய்த் தோர்ப் பட்டிகை என்பதற்கக் குறிப்புரை எழுதிய டாக்டர் சாமிநாத ஐயர் அவர்கள், “நெய்த்தோர் = இரத்தம். பட்டிகை = பத்திரிகை” என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால், இத்தொடருக்கு விளக்கம் காண முடியவில்லை. இஃது ஐயரவர்களுடைய குறையன்று. இக்காலத்துப் புலவர்கள் வேறு யார் உரை எழுதினாலும் இவ்வளவு தான் எழுத முடியும். பண்டைக் காலத்து உரையாசிரியர்கள் இத்தொடருக்கு உரை எழுதியிருந்தால் தெளிவான விளக்கவுரை எழுதியிருப்பார்கள். பண்டை யுரையாசிரியர் ஒருவரும் இதற்கு உரை எழுதவில்லை.

"நெய்த்தோர்ப் பட்டிகை என்பது, பண்டைக் காலத்தில் வழக்காற்றில் இருந்து இக்காலத்தில் வழக்கற்றுப் போன ஒரு செய்தி யெனத் தெரிகிறது. பண்டைக்காலத்துச் சாசனங்களின் உதவியினாலே, இச் சொற்றொடரின் உண்மைப் பொருள் அறியக்கிடக்கிறது.

உதயணன், பாஞ்சால மன்னனை வென்று, அவ்வெற்றியின் மகிழ்ச்சியினாலே, பத்து ஊர்களை நெய்த்தோர்ப் பட்டிகையாகக் கொடுத்தான் என்பது மேலே காட்டிய செய்யுளின் கருத்து. நெய்த்தோர் என்பது இரத்தம் அல்லது உதிரம் எனப் பொருள்படும். பட்டிகை என்பதற்குப் பத்திரிகை என்று பொருள் கொள்வதைவிட பட்டி எனப் பொருள் கொள்வது சிறப்புடைத்து. நெய்த்தோர்ப்பட்டி என்று பெருங்கதையில் வழங்கப்பட்டுள்ள இச்சொற்றொடர் சாசனங்களில் உதிரப்பட்டி என்று வழங்கப்பட்டிருக்கிறது. வேறு சாசனங்களில், செந்தமிழ்ச்செல்வி : சிலம்பு, 22, 1948.