உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

29

விளக்கம் : திருமால் மாவலிவாணன் என்னும் அரசனுடைய போர் வெற்றியைக் கூறுகின்றன இச்செய்யுட்கள்.

சாசனச் செய்யுள்

அடுகயலை முன்னாளி லாடகக் குன்றிட்ட

வடுமறைந்து போயும் மறையா - முடுகுசமர

மாற்றோர் தொழுந்திருமால் மாவுதைப்ப வேல்வழுதி

தோற்றோடிப் போன சுவடு.

1

மாலாக்கி யிந்திரையைத் திருத்தோள்வைத்து வையமொரு கோலாற் புரந்தருள மாவலிவாணன் நன்கொற்றவடி வேலாற் றுரப்புண்டபின் வீரமாறன் வெகுண்டு பண்டு காலாற் குடித்த கடற் கண்களால் விழக் கண்டனமே.

2

ஏற்றார்க் கிடாதா ரில்லையென்ப தின்றறிந்தேஞ் சீற்றத் திருமால் செருவேற்க - மாற்றிலாப்

பொன்னிட்டான் சென்னிகொடிப் பன்னிட்டான் சேரமான் வென்னிட்டான் கொற்கையார் வேந்து.

3

குறிப்பு :- செய்யுள் 1. ஆடகக் குன்று - பொன்மலை, இமய மலை. திருமால் திருமால் மாவலிவாணன். மாவலிவாணர் என்னும் வாணாதிராயர்கள், பாண்டியரின் கீழ்ப் படைத் தலைவராக இருந்தவர்கள். பாண்டியர் ஆற்றல் குறைந்த பிற்காலத்தில் இவர்கள் சுயேச்சை பெற்றுப் பாண்டிய - அரசர்களைத் தமக்குக் கீழ்ச் சிற்றரசராகும்படிச் செய்தார்கள். இவ்வாணாதிராயர்களில் ஒருவன் திருமால் மாவலிவாணன் என்பவன். செய்யுள் 2. மாவலிவாணனால் துரத்தப்பட்ட வீரமாறன் என்னும் பாண்டியன் வரலாறு தெரியவில்லை. செய்யுள் 3. மூன்றாம் வரியில் கொடிப் பன்னிட்டான் என்றிருப்பது கொடிப்பின்னிட்டான் என்றிருத்தல் வேண்டும். வென்னிட்டான் முதுகுகாட்டித் தோற்றோடினான்.

சண்டேசுவரர்

இடம் : செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, பெரும்பேர் கிராமம், இவ்வூர் தான்தோன்றீசுவரர் கோவில் முன் மண்டபத்துத் தெற்குச்சுவரில் உள்ள சாசனச் செய்யுள்.