உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

மன்னனுடைய குணங்களைப் புகழ்ந்து பேசி, அவன்மேல் அவளுக்கு விருப்பம் உண்டாகும்படி செய்தாள்.

இதனையறிந்த சுலசையின் தாயாகிய அதிதி, சுலசையை அழைத்து இவ்வாறு கூறினாள்: “என்னுடைய தமயனும் உன்னுடைய மாமனுமாகிய திருணபிங்களன் மகன் மதுபிங்களன் உளன். அவன் நல்ல அழகும் இளமையும் உள்ளவன். உன்மீது மிக்க அன்புள்ளவன். அவனுக்கே மாலையிடுவது நன்மையாகும்" என்று கூறினாள். மணமக ளாகிய சுலசை அவ்வாறே தன் மாமன் மகனாகிய மதுபிங்களனுக்கு மாலையிட இசைந்தாள்.

இந்தச் செய்தியை மண்டோதரி அறிந்து, தன் யத்தனம் வீணானதை யுணர்ந்து, சகர அரசனிடம் சென்று நிலைமையை அவனுக்கு உரைத்தாள். அப்போது, அவன் அமைச்சனான விஸ்வபூ என்பவன், தான் அந்தக் காரியத்தை முடிப்பதாகச் சொன்னான். சகர அரசன் மனம் தேரினான். அமைச்சனான விஸ்வபூ, “வரலக்ஷணாதி சுயம்வர சாஸ்திரம்” என்னும் பெயருள்ள போலி நூல் ஒன்றைத் தானாகவே எழுதி, அதனைச் சுயோதன அரசனுடைய பூஞ்சோலையில் ஒருவருமறியாமல் புதைத்துவைத்தான். பிறகு, தோட்டக்காரனை அவ்விடத்தில் தோண்டச் செய்து, அந்தச் சுவடியை எடுத்து அரசனிடம் கொடுக்கும்படியும் சூழ்ச்சிகள் செய்தான்.

தோட்டக்காரன் தான் கண்டெடுத்த சுவடியைச் சுயோதன அரசனிடம் கொடுக்க, அரசன் சபையில் அதனைவாசிக்கச் சொன்னான். அதில் எழுதப்பட்டிருந்த பல விஷயங்களில் ஒன்று, எவ்வளவு அழகனாக இருந்தாலும் பிங்கள நிறம் உள்ள கண்ணுள்ளவனுக்கு மாலையிடக்கூடாது: அத்தகையவனுக்கு மாலையிட்டால் மணப்பெண் மரணமடைவாள் என்பது. இதைப் படித்த போது, சபையில் இருந்தவர், பிங்கள நிறமுள்ள கண்ணையுடையவனான மதுபிங்களன் என்னும் அரசகுமாரனைப் பார்த்தார்கள். மதுபிங்களன் வெட்கம் அடைந்தான். சபையில் உள்ளவர் எல்லோரும் அடிக்கடி தன்னையே பார்ப்பதனால், வெட்கமடைந்த மதுபிங்களன், இனி சுலசை தனக்கு மாலையிட மாட்டாள் என்று அறிந்து, அந்நகரத்தை விட்டுப் போய்விட்டான்.

பின்னர் நடைபெற்ற சுயம்வரத்தில், சுலசை சகரராசனுக்கு மாலையிட்டாள். ஆகவே, சகரன் சுலசையை மணந்து தன் நாடு சென்றான்.