உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

113

எறிந்துவிட்டு. ஊருக்குள் பிச்சை ஏற்கச் சென்றார். பிச்சை ஏற்று உணவு கொண்ட பின்னர், குண்டல கேசியும் சாரிபுத்தரும் நாவற்கிளை இருந்த இடத்திற்கு வந்தனர்.

நாவற்கிளையை வீழ்த்தியவர், வாதம் செய்யவேண்டுவது கடமையாகையால், இருவரும் சமயவாதம் செய்யத் தொடங்கினார்கள். நெடுநேரம் வாதப்போர் நடந்தது. குண்டலகேசி கேட்ட வினாக்களுக்கு சாரிபுத்தர் விடையளித்தார். பிறகு, சாரிபுத்தர் கேட்ட வினாக்களுக்கு விடையளித்துவந்த குண்டலகேசி, சில கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல், தனது தோல்வியை ஒப்புக்கொண்டாள், பிறகு, குண்டல கேசி, சாரிபுத்தரை வணங்கி, தன்னைப் பௌத்த மதத்தில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினாள். சாரிபுத்தர், குண்டலகேசியைப் பகவன் புத்தரிடம் அழைத்துச் சென்று, அவர் முன்னிலையில் பௌத்தத் துறவி யாக்கினார். பிறகு, குண்டலகேசி நெடுநாள் பௌத்தத் தேரியாக வாழ்ந்து கடைசியில் வீடுபேறடைந்தாள்.

குண்டலகேசியின் இந்த வரலாற்றினைக் கூறுவதுதான் குண்ட கேசி என்னும் பௌத்தக் காவியம். இக் காவியத்தை இயற்றியவர் நாத குத்தனார் என்னும் பௌத்தர் என்று நீலகேசி, 344ஆம் செய்யுள் உரை கூறுகிறது.

சோழநாட்டில் இருந்த பௌத்த பிக்குவாகிய பேர்போன காசியப் தோர், 'விமதிவினோதனீ' என்னும் பாலிமொழி நூலுக்குத் தாம் எழுதிய டீகா என்னும் உரையிலே, குண்டலகேசியின் ஆசிரியராகிய நாகசேனரைக் கூறுகிறார். அவர் கூறுவது இது:

“புப்பேகிர இமஸ்மின் தமிளாட்டே கோசிபின்ன லத்திகோ நாக சேனோ நாம தேரோ குண்டலகேசி வத்துன் பாவாத மதன நய தச்ச னத்தன் தமிள கப்ப ரூபேன கதராந்தோ.” இதன் பொருள்:

"பழங்காலத்தில் இந்தத் தமிழ் நாட்டில் மாறுபட்ட கொள்கை யுடைய நகேசேனன் என்னும் ஒருதேரர், எதிரிகளின் கொள்கைகளை அழிக்க எண்ணிக் ‘குண்டலகேசி' என்ற காப்பியத்தைத் தமிழில் இயற்றினார்.”4

இதனால், குண்டலகேசியின் ஆசிரியர் பெயர் நாதகுத்தனார் என்று நீலகேசியுரை கூறுவது தவறு என்பதும், நாகசேனர் என்பதே அவர் பெயர் என்பதும் தெரிகின்றன.