உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

133

இது விம்பசார கதை யென்னுங் காவியம்; பௌத்தருடைய நூல். அதன்கட் கண்டுகொள்.

இவ்விரண்டு உரையாசிரியர்களும் கூறுவதிலிருந்து, விம்பசார கதை அல்லது பிம்பசார கதை என்னும் பெயருள்ள பௌத்த மத காவியம் ஒன்று இருந்ததென்பது தெரிகிறது. இதைப்ப பற்றி வேறு செய்திகள் ஒன்றும் தெரியவில்லை. இந்நூலாசிரியர் யார், அவர் இருந்த காலம் எது என்பனவும் தெரியவில்லை.

பிம்பசாரன் என்னும் அரசன், புத்தர் உயிர்வாழ்ந்திருந்த காலத்தில் மகத தேசத்தை அரசாண்டுவந்தான். புத்தரிடம் நட்புகொண்டு அவருக்குச் சீடனாக இருந்ததோடு, புத்தருக்கும் பௌத்த மதத்துக்கும் பல தான தருமங்களைச் செய்தான். இந்த அரசன் புத்தருடைய வாழ்க்கை வரலாற்றில் பல வகையிலும் தொடர்புடையவன். தன் மகன் அஜாத சத்துரு என்பவனால் இவன் சிறையிலிடப்பட்டு உயிர்நீத்தான். பௌத்தர்களினாலே பெரிதும் போற்றப்படுபவன் ஆவன். பிம்பசார காவியம் இவன் வரலாற்றைப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்டது போலும். மணிமேகலை என்னும் பௌத்த காவியத்தைப் போலவே இந்தக் காவியமும் ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டதுபோலும்.